Thursday, September 07, 2006
மதியழகன் சுப்பையா கவிதைகள்
1
என் தொடுதல்களை
பொருட்படுத்தியதில்லை நீ
சுகித்து மகிழ்கிறேன் நான்.
என் உரைகளை
புரிந்ததில்லை நீ
உலரி மகிழ்கிறேன் நான்.
என் எண்ணங்களை
உணர்ந்ததில்லை நீ
வெளிப்படுத்தி மகிழ்கிறேன் நான்.
என் செயல்களை
வாழ்த்தியதில்லை நீ
செய்து மகிழ்கிறேன் நான்.
என் காதலை
ஏற்றதில்லை நீ னாலும்
காதலித்து மகிழ்கிறேன் நான்.
2
கடிதமிட்டிருக்கலாம்
கத்தி சொல்லியிருக்கலாம்
இணையம் மூலம் கூட
இணைந்திருக்கலாம்
எதிர் வீட்டு
தம்பியையோ
பக்கத்து வீட்டு
தங்கையையோ
தூதாக்கியிருக்கலாம்
இதயம் வரைந்த
வாழ்த்து அட்டையோ
திரைப்பட பாடலோ கூட
உதவியிருக்கக் கூடும்
என்று காதலை தெரிவிக்க
வழி சொல்லி புலம்புகிறாய்
ஒரு முறையாவது
என் மார்பு நுனி விட்டு
கண்களை கண்டிருந்தால்
தெரிந்திருப்பாய்
உனக்கான என் காதலை.
3
நிஜம் தொடரும்
நிழல்கள்
சொல் உமிழும்
பொருள்கள்
வினை விதைக்கும்
வினைகள்
ஒன்று இயக்கவே
மற்றொன்று இயங்கும்
இருத்தல் கூட
இயக்கமாகும்
சில பொழுது
சலனமும்
ஸ்திரமும்
சமமாகும் சமயத்தில்
உண்டு இல்லை
ஒன்றாகும் ஒருவேளை
க்கல் அழித்தல்
நிகழும் நொடியில்.
4
தோழனுடையதோ
தோழியுடையதோ
ஒருமுறை
தொடர்பு கொண்டு
தெரிந்திடலாம் தான்
என்ன கேட்பது
எப்படி கேட்பது என்ற
தயக்கம் வேறு
அகர வரிசையில் உள்ள
எண் முகவரி ஏட்டில்
தேடித் தெரிவதும்
சிரமம் தான்
உரியவரே
தொடர்பு கொண்டால்
நினைவுக்கு வரலாம்
இருப்பினும்
தொலைபேசி எண்னேட்டில்
பெயர் குறிக்க
மறந்து போன
எண்ணைப் பார்க்கையில்
பதைக்கிறது மனம்.
5
தாம்புலச் சிகப்பாய்
வெளிர் மஞ்சளாய்
வெண்மையாய்
பிறையாய்- அரையாய்
முழுதாய் என
பரிணாமங்களை
ரசிக்கச் சொல்கிறேன்
உச்சுக் கொட்டி
உதடு பிதுக்கிறாய்
துளியாய் உதிர்த்து
துளித்துளியாய் தெரித்ததை
உடைத்து சிதைத்து
கோடு வரைந்து
வலக்கை பிடித்ததை
இடக்கை ஊற்றி
நாக்கை நீட்டி
நடுவில் வைத்து
வந்து உன்னை
வாழச் சொல்கையில்
எதையும் இழுத்து
வைக்காதே என
எரிந்து விழுகிறாய்
பெருக்கி கூட்டி
வகுத்து கழித்து
குழம்பிப் போய்
குந்துகிறாய்
வங்கி நிரப்பியும்
வீட்டில் தெளித்தும்
அமைதி உன்னிடம்
அட்டை வடிவில் தான்
சொல்லித் தந்ததை
மறந்து விட்டாய்
சொல்லித் தருகிறேன்
மறுத்து விடுகிறாய்.
6
என்ன துணிச்சல்
என்னிடம் சொல்வதற்கு
நான் ஏற்கனவே............
உனக்கு இது தேவையா ?
இதெல்லாம் எனக்கு பிடிக்காது
இப்படியாய்
எதாவது கூட இருக்கலாம்
மெளனமென்றால்
சம்மதம்
என்பதைத் தவிர.
7
நான் கவிதை குறித்து பேசுகிறேன்
நீ கைகள் சிவக்க முத்தமிடுகிறாய்
ஏதேனும் சாதித்த பின்
சாக வேண்டும் என்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்
அடிமைத்தனத்தை நம்
வீட்டிலிருந்தே ஒழிக்க
வேண்டுமென்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்
வேறுபாடற்ற சமுதாயத்தை
உருவாக்க திட்டம் சொல்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்
பிரச்சனைகளுக்கெல்லாம்
தீர்வு காண்பிக்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்
உன் வேலைகளை நீயும்
என் வேலைகளை நானும்
செய்ய வேண்டுமென்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்
கண்களை மூடி
செவி திறக்கிறாய்.
8
ஒண்ணு ரெண்டு மூனுயென
எண்ணியும்
ராமா ராமாவென
உச்சரித்தும்
கண்ணை மூடி
பல்லைக் கடித்து
அடக்கியும்
அடங்காமல்
மீண்டும் பார்த்து விட்டேன்
பேரூந்தில் கைதூக்கி
நின்றவளின்
அக்குள் கிழிசலை.
9
குறிப்பறிந்து
சமைக்கிறாய்
துவைக்கிறாய்
கால் பரப்பி
படுக்கிறாய்
நானும் குறிப்பறிந்து
மேற்படி நடந்தால்
எனக்காக இப்படியொரு
கவிதையை நீ வடிக்க
நேரிடும்
அதனால்
பின்னோர்கள்
பின்பற்ற
புதிய வாழ்வு முறையை
வடிவமைத்து கொடுப்போம்.
10
எதேச்சையாக
எதிர்பட்டு புன்னகைக்கிறேன்
தொடர்பற்றுப் பேசி
தொந்தரவு செய்கிறேன்
வேலைக்கு விரைகையில்
ஓட்டமும் நடையுமாய்
தொடர்கிறேன்
தொலைபேசியில் அழைத்து
வழிகிறேன்
மறுக்கையிலும்
பரிசுகளை திணிக்கிறேன்
கேட்காமலேயே
அபிப்ராயம் சொல்கிறேன்
இத்தனை இயல்களிலும்
காதல் வெளிப் பட்டதாய்
கற்பிதம் சொல்லி
நட்பை கொன்று விட்டாய்.
11
உனக்கு
புன்னகை மூட்ட
புன்னகை மூடி
பொறுத்திக் கொண்டுள்ளேன்.
இயல்பாய்
உன் மீது பட்ட விரர்களை
கண்களில்
ஒற்றிக் கொண்டுள்ளேன்
வேராய் இறங்கும் உன்
நினைவுகளை
உடம்பில்
சுற்றிக் கொண்டுள்ளேன்
இன்னும் உள்ளேன்கள்
பல உள்ளன
மெய் விரித்து
நிற்குமென்னில்
கைவிரித்துப் படர்ந்திடு
கதை கதையாய் சொல்கிறேன்.
12
கருப்பாய் இருந்தாலும்
எடுப்பாய் இருக்கீங்க என்ற
இந்திராவிடம்
'விளையும் பயிர்..............'
பழமொழியை
அழுத்திச் சொன்ன
வனிதாவிடம்
ஓடிப் போயிடுவோமாடா ?
எனக் கேட்ட
எனக்கு மூத்த
மல்லிகாவிடம்
அம்மாவை அத்தையாக்கி
என்னை அத்தானாக்கிய
பாக்கியத்திடம்
அப்பொழுதே யாரிடமாவது
வெளிப் படுத்தியிருக்க வேண்டும்
முன் தலை வழுக்கை
காதோர நரை
செல்லமாய் தொப்பை
இந்நிலையில்
யாரிடம் வெளிப்படுத்த
இளைய எண்ணங்களை
எப்படி மறைக்க
வெளிப்பட்ட முதுமையை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//ஒரு முறையாவது
என் மார்பு நுனி விட்டு
கண்களை கண்டிருந்தால்
தெரிந்திருப்பாய்
உனக்கான என் காதலை.//
மார்பு நுனி மட்டும் பார்க்கும் ஒருவனிடம் காதல் வருமா?
Post a Comment