Friday, September 08, 2006

அ ப் பு ற ம்

---------------------------------

அ ப் பு ற ம்

----------------------------

1.
அப்புறம் பேசுகிறேன் என்கிறாய்
இப்பொழுது எனக்குள்ள
தேவைக்கு அப்புறம்
என்பது காலதாமதமே.

அப்புறம் பார்க்கலாம் என்கிறாய்
எப்பொழுதும் பார்க்கத்
துடிக்கும் எனக்கு
அப்புறம் அனாவசியமே.

அப்புறம் சொல்கிறேன் என்கிறாய்
அப்பொழுதயதை
அக்கணமே சொல்லாவிடில்
அப்புறம் தேவையில்லைதான்.

அப்புறம் என்ற
பின்னொரு காலம்
நோக்கி விரைகிறேன்
அருகாமையில் இல்லை
அப்புறங்கள்.
------------------------------------------------------------------------------
2.
பகிர்ந்து கொள்ளாததை
பகிரத் துடித்து வருகிறேன்

காலை தொடங்கி
ஏடுகள் சுரண்டி
கனத்த மூளையின்
பாரம் இறக்க வருகிறேன்

மோகக் காய்ச்சலால்
எரிகிற மேனியை
அணையென
அதிர்ந்து வருகிறேன்

கண்களிலுன் காட்சியை
காதுகளிலுன் வார்த்தைகளை
நிரப்பிக் கொள்ள
விரைந்து வருகிறேன்

இதுவே தாமதமென
எண்ணியிருக்கையில்
அப்புறம் பார்க்கலாமென
அலட்சியப் படுத்துகிறாய்
------------------------------------------------------------------------------
3.
நேற்று
நேற்றுக்கு முன்

சற்று
சற்றுக்கு முன்

இன்று, இப்பொழுது
இப்படி
எப்பொழுது கேட்டாலும்
அப்புறம் என்ற
யத்த சொல்லுதிர்க்கிறாய்

காலத்தின் ஒவ்வொரு
நுண்ணிய கிளையிலும்
தனித்து தங்கி
கழிகிறதென் வாழ்வு

இனி, இனியொரு
பொழுதுக்குப்பின்
வருவதுதான் அப்புறம்
அப்புறம் சொல்லாதே
அப்புறமென்று.
------------------------------------------------------------------------------
4.
நித்திரை ழியுள்
விழுந்து மறைகிறேன்
தட்டி எழுப்புகிறதுன்
நினைவு விரல்கள்

எச்சில் உலர்ந்த
முத்த வடுக்கள்
வலிக்கிறது ரணமாய்

ஊழிக் காற்றையே
சுவாசித்தும்
மூச்சுத்திணருகிறேன்

றுதல் ரத்தம்
அவசியப்படும்
இந்நிலையில்
அப்புறமென்னும்
நச்சுச் சொல்
உறிஞ்சுகிறதென் உயிரை.
------------------------------------------------------------------------------
5.
ஒரு முத்தம் கொடுக்கவா?
அப்புறம்.

இறுக்கிக் கட்டிக் கொள்ளவா?
அப்புறம்.

கணையாழி மாட்டி விடவா?
அப்புறம்.

வீட்டுக்கு எப்ப வர்ர?
அப்புறம்.

எங்கேனும் சுற்றப் போகலாமா?
அப்புறம்.

ஏதேனும் சாப்பிடுகிறாயா?
அப்புறம்.

மணம் செய்வோமா?
அப்புறம்.

அப்புறம்?
அப்புறம்.
------------------------------------------------------------------------------

1 comment:

- யெஸ்.பாலபாரதி said...

நல்ல கவிதைகள் மதி தொடர்ந்து எழுதுங்கள்.