Saturday, September 09, 2006

‘அரவானிகளைப் பற்றி அரவானிகள்தான் எழுத வேண்டும்’

ஆஷாபாரதி, தமிழக அரவானிகள் சங்கத் தலைவி


சந்திப்பு: அன்பாதவன், மதியழகன் சுப்பையா - மும்பை

கேள்வி : உங்களைப் பற்றி. . . .?

அது முடிஞ்சு போன கதை. அதனால் அதிலேயிருந்து ஆரம்பிக்காம நான் வந்து ஆஷாபாரதி ஆனதிலேயிருந்து சொல்லுறேன். நான் முதன்முதலா அரவானிகள் சமூகத்தில் வந்ததும் எல்லோருக்கும் போல எனக்கும் பெயர் சூட்டப்பட்டது. இயற்கையாக ஆணாகத் தான் பிறந்தேன். பின் பெண்ணாக மாறி வந்ததும், உலகம் உனக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் தருகிறோம் என அன்பு கரத்தை நீட்டி ‘ஆஷா’ன்னு பெயர் வச்சாங்க. ஆனா சின்னவயசிலேயே இருந்து பாரதியார் கவிதைகள் மற்றும் அவரது படைப்புகள் மேல இருந்த தீராத தாகத்தினால் ‘பாரதி’ என்ற பெயரையும் இணைத்துக் கொண்டேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாத்தான் போச்சு. ஏனென்றால் இந்த சமுதாயத்தில் எத்தனையோ ஆஷாக்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆஷாபாரதி நான் ஒருத்தி தான். பாரதியைப் போல் நானும் வையகம் முழுமையும் அறியப் படணுமுன்னு நினைச்சேன். இது நான் இந்த சமுதாயத்திற்கு செய்கிற பணி வந்து எல்லாத்துக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதால் தான்.

கேள்வி : நீங்க சென்னையில் எந்தமாதிரி ஒரு அமைப்பு வைத்துள்ளீர்கள்?

‘Thamilnadu Aravanigal Association’ என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். தமிழில் சொன்னால், ‘தமிழ்நாடு அரவானிகள் அமைப்பு’ எனலாம். சுருக்கமாகச் சொன்னால் “தா” என்று சொல்லலாம். “தா”ங்கிற பெயர் எதுக்குன்னா, எப்பவுமே ஆங்கிலத்தில் Tamil தான் போடுவாங்க. ஆனா நாங்க அந்த abbreviation வரணுங்கிறதனால thamilன்னு போட்டிருக்கோம். “தா” அப்படிங்கிறத எல்லாருமே ஞாபகம் வச்சுக்கலாம். ஆண்டாண்டு காலமாக மீறப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளை பெறும் எண்ணத்துடன் “தா” என்று பெயரிடப் பட்டது. யாரும் எனக்கு இல்லை என்று சொல்றதில்லை. “கொடு” ‘யூ ஹேவ் டு கிவ் மை ரைட்ஸ்’ ஆரம்பத்தில் அப்படி பெயர் வச்சேன். ஆனால் இப்ப அதுவும் தவறுன்னு நினைக்கிறேன். நீ என்ன கொடுக்கிறது நானே எடுத்துக்கிறேன் போடான்னு ஆயிட்டேன்.

கேள்வி : “தா” என்ற அமைப்பு மூலமா அரவாணிகளுக்கான என்ன மாதிரியான பணிகளில் நீங்க ஈடுபட்டிருக்கீங்க?

எல்லா வகையிலேயுமே “தா” அமைப்புடைய அப்ஜெக்டிவை பார்த்தீங்கன்னா, தி அப்லிப்ட்மென்ட் ஆப் தி டிஸ்கிரிமினிடேட் லெப்ட்அவுட் கம்யூனிட்டி இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ். என்னோட அமைப்பின் புரோசிச்சர்ல போட்டிருப்பேன். அதாவது கல்வி, வேலை வாய்ப்பு, ஹவுசிங், மனித உரிமை மேலும் என்னவெல்லாம் இல்லையோ அதற்காகவெல்லாம் போராடணுமுன்னு ஆரம்பிச்சேன். எதுவுமே இல்லையிங்கிறது வேற விசயம். எனக்கு நீண்ட கால ஒரு தாக்கம்; அதாவது ஒரு ஆஷாபாரதியோ, ஏதோ ஒரு மூலையில ப்ரியாபாபுவோ அல்லது ஒரு சபினாவோ குரல் கொடுக்கிறதனால எதையும் சாதிக்க முடியாது. ஒரு அமைப்பு ரீதியா நாம் போராடத் துவங்கினாத்தான் அதற்கு ஒரு மதிப்பு இருக்கும். எல்லாருமே நம்மை திரும்பி பார்ப்பாங்க; அப்படின்னுட்டு தமிழ்நாட்டில 1998ல அரவானிகளுக்குன்னு அமைப்பு ஆரம்பிச்சது நாங்கதான்.

கேள்வி : கொஞ்ச காலத்திற்கு முன்னால் வரை அரவானிகள் மிகக் கேவலமாக பேசப்பட்டும் நடத்தப் பட்டும் வந்தார்கள் என்பது நீங்கள் அறிந்ததுதான். அந்த அவமானங்களை நீங்களும் சுமந்திருப்பீர்கள். இந்த அமைப்புக்கு பின்னால் இதன் செயல்பாடுகளுக்குப் பின்னால் அரவானிகளுக்கான மரியாதை கிடைத்திருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?

மரியாதை கிடைத்திருக்கா இல்லையா, போராட்டுத்துல நான் வெற்றி பெற்றேனா இல்லையான்னு சீர் தூக்கிப் பார்ப்பதைவிட, அதுக்கு அடிப்படையா இன்று பாலினம் மாறியவர்கள் குறித்து நிறைய பேசப் படுகிறோம். ஊடகங்களில் பேசப் படுகிறோம். கல்லூரிகளில் பேசப்படுகிறோம். நிறைய மாணவர்கள் சமுதாயம் எங்களிடம் வந்து நான் டாக்டரேட் பண்ணுகிறேன். போஸ்ட் கிராஜுவேட் பண்ணுகிறேன் என்றும் தீசிஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். உங்க சப்ஜெக்ட் தான் எடுத்திருக்கோம். அப்படின்னு நிறைய பேர் வர்றாங்க. இதுவே மிகப் பெரிய மாறுதல். அதனால் நாங்க எதிர்பார்த்ததை அடையக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. பொதுச் சமுதாயம் வந்து இந்தப் பக்கம் பார்வையை திருப்பி விட்டது. இவர்களும் என்னமோ பண்ணுறாங்க அப்படின்னுட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை இயக்கங்கள் எல்லாமே இப்ப திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டது. அதுவே பெரிய மாற்றம்தான்.

கேள்வி : நீங்க பேசறப்போ அதாவது ‘பாலியல் திரிந்தவர்கள்’ அப்படின்னு. ஒரு சொல்லாடல் பயன்படுத்தினீர்கள். பொதுவாக இன்றைக்கு அரவானிகள் என்ற வார்த்தைதானே பயன் படுத்துகிறார்கள்?

இந்த அரவானி என்ற சொல்லே காவல்துறை ஒருவர் எங்களுக்கு வழங்கிய பெயர். இப்பொழுது சேலம் மாவட்ட டி.ஐ.ஜி.யாக இருக்கிறார். 1997ல் அவர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார். எங்களுடைய நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தோம். ஒரு சமூக பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியா மீடியாவுக்கு என்ன வேண்டுகோள் விடுத்தார்னா, ‘அலி’ என்கிற ஒரு சொல்லே கேலிக்குரிய ஒரு சொல்லாயிடுச்சு, அதை தமிழ் அகராதியில இருந்து நீக்கணும் அதுக்குப் பதிலாக கூத்தாண்டவர் கோயில்ல வந்து சாமிக்கு இன்னொரு பெயர் அரவான். வருடாவருடம் இத்தனை லட்சக் கணக்கான பேர் அந்த அரவானை வழிபட வர்றதினால் அழகான தமிழில் இவர்களை ஏன் அரவானிகள்னு கூப்பிடக் கூடாது; கூப்பிடணும்; இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அப்படின்னு சொன்னார். அதுதான் மிகப் பெரிய மாறுதல். ஆனா காலப் போக்கில் சில பேரோட மாறுபட்ட சிந்தனையால் வாக்கு வாதங்கள் எல்லாம் நடந்தது. சமூகத்தோட மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவிலேயே சிறந்த உதாரணம் அரவானிதான். இவர்களுக்கு ஜாதி, மதம் எதுவுமே கிடையாது. அப்படிங்கிற போது இது ஏன் மதம் சார்ந்த, இந்து மதத்தை சார்ந்த பெயராக இருக்கணும் என்று சொல்லிக் கேட்டார்கள். இப்பவும் மதம் சார்ந்து எதையும் பண்ணல. இருந்தாலும் ஒரு நல்ல மாற்று சொல்லாடல் கிடைச்சிட்டுங்கிற சந்தோசத்தில் ஒரு மனதா எல்லாரும் ஏத்துக்கிட்டோம் இன்னைக்கு வந்து அதுவே நிலைத்தும் போனது.

நர்த்தகி நடராஜ் வந்து தூயத் தமிழில் ‘திருநங்கை’ன்னு ஒரு பெயர் சொன்னாங்க. அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதுக்கு முன்னாடியே இந்த அரவானிங்கிற சொல் பத்திரிகையில் வெளி வந்து பேர் ஆயிடுச்சி. அதிலயும் இந்த வல்லினம், மெல்லினம், இடையினத் தகராறு இருக்கு. பத்திரிகைக் காரர்கள் அனைரும் மூன்றுசுழி ‘ணி’ தான் போடுவாங்க. ஆனா அந்த ‘அலி’ங்கிற சொல் வந்து ரொம்ப கேவலமாயிடுச்சி. நம்முடைய இலக்கியம் சங்க காலத்தில் இருந்து அந்த சொல்லத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கும் முன் வேற சொல்லாடல் இருந்தது. காலப்போக்கில் மருகி அலி என்ற சொல் வந்தது. நான் என்ன சொல்கிறேனென்றால். நீ அலியா, அரவானியா இல்லை திருநங்கையா எதுக்கு எதனால் இந்த கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறோம், இந்த பாலியல் திரிபு, பாலியல் திரிந்தவர்கள்ன்னு அழகா சொல்லிட்டு போயிடலாமே. எந்தக் குழப்பமும் வேண்டாமுன்னுதான் நான் இந்த சொல்லையே பயன்படுத்தினேன். இந்த பாலியல் திரிபு வந்து உலகத்திற்கு குறிப்பா இந்திய மண்ணுக்கு புதுசே கிடையாது. மகாபாரதம் ஒரு சிறந்த இதிகாசம் என்று எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதில் வரும் சிகண்டி பாத்திரம் ஒரு அருமையான பாத்திரம்.

சீவகசிந்தாமணியில் வந்து நிறைய பாத்திரங்கள் இருக்கு. சரித்திர ஆதாரங்களை எடுத்துப் பார்க்கப் போனால் சமுதாயத்தில் இந்த பால் திரிந்தவர்களை அவர்கள் ஒதுக்கி வைக்கவில்லை. சமுதாயத்தில் சமமான அந்தஸ்தை கொடுத்து வைத்திருந்தார்கள். மாணிக்கவாசகர் கூட என்ன சொல்லியிருக்கார்னா, “ஆணாகி, பெண்ணாகி, அலியாகி உன்னடி சேரணும்” என்றார். ஒளவை மூதாட்டியும் இதை ஒரு உடல் ஊனமாகத்தான் பார்த்தாள். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; கூண், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது” என்றார்கள். அப்படின்னா அது உடல் குறைதான். எப்ப மாறியது என்றால், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய மண்ணில் காலை பதிச்சதுக்கு ஆங்கில ஏகாதிபத்தியத்தோட மோகத்தினால் ஆட்பட்டோம். நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது; இல்லை என்று சொல்லவில்லை. விஞ்ஞான முன்னேற்றம் மற்ற எல்லாமே நடந்தது; இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இதையெல்லாம் வச்சிக்கிட்டு நாம் ஒப்பற்ற மனிதத்தை இழந்து விட்டோம். சக மனிதர் என்கிற ஒரு அங்கீகாரத்தை இழந்து விட்டோம். இது அரவானிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. அக்கம் பக்கத்து வீட்டில் யார் எவர்ன்னும் தெரிய மாட்டேன் என்கிறது. முன்பெல்லாம் அப்படி இல்லை. தொடர்பே இல்லாம போயிடுச்சி. மதம் என்கிற பெயரால் வெட்டிக் கொண்டு சாகிறார்கள்.

கேள்வி : அரவான் வந்து மகாபாரத்தின் ஒரு பாத்திரம் என்றீர்கள். அப்படின்னா இங்க இந்து மதத்தைச் சார்ந்த அரவானிகள் வந்து கூத்தாண்டவர் கோயிலுக்குப் போய் தாலி கட்டிக் கொள்கிறார்கள் எல்லாம் செய்கிறார்கள்; இந்து மதத்தைச் சாராத பிறமதத்திலேயும் அரவானிகள் இருக்கிறார்கள்; அவர்கள் எப்படி இதை ஏற்றுக் கொள்கிறார்கள்?

தென் இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கக் கூடிய ஒரேயொரு திருவிழா இது மட்டும்தான். மத்தபடி அரவானிகள் வீட்டில வந்து பூப்படைந்த மாதிரி சடங்கெல்லாம் பண்ணுவாங்க; அதெல்லாம் வந்து முக்கியம் கிடையாது. பப்ளிக்கா வெளியில வர்றது அது ஒண்ணுதான். சுற்றங்கள் சூழ வந்து அவங்க சந்திக்கிற ஒரே விழா இதுதான். இவர்களுக்கு அரவானை வேண்டினா ஒரு நல்லது நடக்குமுன்னு பலமான நம்பிக்கை உண்டு. கிறிஸ்டின் வருவாங்க. முஸ்லிம் வருவாங்க. அரவானிகள் சமுதாயத்துல முஸ்லிம்கள் நிறைய உண்டு. அதனால மதம் வந்து இங்க ஒரு பிரச்சனையே இல்லை. மத வழிபாடும் பிரச்சனை இல்லை.

கேள்வி : அப்படின்னா மதங்களை மீறிய ஒரு ஒன்றுதல்தானா?

ஒன்றுதல்தான். அதைவிட சரியான ஒரு விஷயம் சொல்லணுமுன்னா. என் மனதில் நான் வந்து அந்த கோணத்தில்தான் பார்க்கிறேன். எங்கையாவது எந்தத் திருவிழாவாவது, இல்லை எந்த பொது நிகழ்ச்சியாவது மிகுந்த சந்தோசத்தோடு, மகிழ்ச்சியோடு, ஜாலியாக ஆரம்பித்து ஆழ்ந்த சோகத்தில் முடிந்ததை பார்த்து இருக்கீங்களா? எங்கேயும் கிடையாது. இந்தக் கூத்தாண்டவர் திருவிழா ஒன்றுதான். அவ்வளவு கேலி, கிண்டல், ஜாலி, கல்யாணப் பெண் மாதிரி அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்குப் போய் தாலி கட்டிக்கிட்டு மறுநாள் தாலிய அறுத்துக்கிட்டு அவர்கள் அழுவார்கள் பாருங்க, கஷ்டமாக இருக்கும் கூத்தாண்டவரை வருடாவருடம் பலி கொடுக்கிறார்கள் அது பிரச்சனை இல்லை. அவர்களுடைய உள்ளத்தில் இருக்கிற சோகம் அந்த வெளிப்பாடு. அய்யோ இன்று நான் என் சோகம் என மனசுக்குள்ள இருக்கிறத எல்லாம் கொட்டி அன்னைக்கு அழுவார்கள். அவங்களே நினைச்சா கூட அழுகைய நிறுத்த முடியாது. இவங்க யாரும் சினிமா நடிகர்கள் கிடையாது. கிளிசரின் போட்டு நினைத்தவுடன் அழுவதற்கு நீங்க ஒரு வருடம் வந்து பாருங்க தொடர்ந்து அவர்கள் குமுறிக்குமுறி அழுவது தெரியும்.

கேள்வி : இப்ப என்ன காரணத்திற்காக மும்பை வந்திருக்கிறீர்கள்?

மும்பை, டெல்லி, பெங்களூரில் வந்து ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அதாவது மிகச் சிறந்த பெரிய வழக்கறிஞர்களெல்லாம் சேர்ந்து வைத்துள்ளார்கள். மும்பையில் ஆனந்த் திராவர் போன்ற லீடிங் லாயர்கள் எல்லாம் இருக்கிறார்கள். டெல்லியிலிருந்தும் பலர் இருக்கிறார்கள். ‘செக்சுவல் மைனாரிட்டின்னு’ ஒரு சொல் இருக்கிறது. அரவானிகள் மட்டுமல்ல இதில் எல்ஜிபிடி என்பார்கள் லெஸ்வியன், ஹே, பைசெக்சுவல் அண்ட் டிரான்ஸ் செக்சுவல். இந்த நான்கும் சேர்ந்துதான் ‘செக்சுவல் மைனாரிட்டி’ அதாவது பாலியல் சிறுபான்மையினர். எங்களுக்கு எல்லாருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது எழுத்தளவில் மட்டும்தான் இருக்கு. சட்டரீதியான உரிமைகள் இது வரைக்கும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. உரிமைகள் கிடைக்கலை என்பதை விட சட்டப் பாதுகாப்பு இல்லை. உதாரணத்திற்கு இந்திய அரசியல் சட்டத்தில் செக்சன் 377ஐ அமென்டமெண்ட் பண்ணு என்றால் இவர்கள் செய்வதில்லை. செக்சன் 377ஐ ஒரு நல்ல செக்சன்தான், சைல்டு அப்யூஸ்லிருந்து எல்லாமே வருகிறது. குறிப்பாக என்னவென்றால் அன்நேச்சுரல் செக்ஸ் என்று சொல்லுகிறார்கள். அதாவது இப்பொழுது நான் பாலியல் மாறிவிட்டேன்.

ஒரு ஆணை திருமணம் செய்து கொள்வதற்கோ அவனுடன் சேர்ந்து வாழ்வதற்கோ அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்வதோ என்பது இயற்கையான உடலியல் தேவை ஒவ்வொரு ஜீவராசிக்கும் தேவையான ஒன்று. அவனுடன் நான் உடலுறவு வைத்துக் கொண்டால் சட்டத்தின் கண்களுக்கு அது தப்பாகப் படுகிறது. உன் கண்ணுக்கு தப்பா தெரியுறது என் கண்ணுக்கு நியாயமா தெரியுது. அதுல வந்து சட்டத் திருத்தங்களை கொண்டு வரச்சொல்லிதான் நாங்க போராடிக் கொண்டிருக்கிறோம். அது விஷயமாத்தான் கடந்த ஆண்டும் மும்பையில் மீட்டிங் நடந்தது. டெல்லி உயர் நீதி மன்றத்திற்கு அதை கொண்டு போனாங்க; அது டிஸ்மிஸ் ஆயிடுச்சி. அப்புறம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போச்சு; சுப்ரீம் கோர்ட் வந்து இதை திரும்பவும் விசாரிக்கனுமுன்னு ஹை கோர்ட்டுக்கு உத்தரவு போட்டிருக்கு. சுப்ரீம் கோர்டில் நாங்க கேட்பது என்னவென்றால் சுப்ரீம் கோர்ட் ஒரு சட்டத்தை மாத்தனுமுன்னு ஆணையிட்டால் அதை இந்திய அரசு மாற்ற வேண்டும். அதைத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சட்டத்தை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை; சட்டத்தை திருத்த வேண்டும்; அவ்வளவுதான்.

கேள்வி : பொதுவாக இதுமாதிரியான அரசு அமைப்புகளோ தொண்டு நிறுவனங்களோ மற்ற அமைப்புகளோ உங்களுக்கு எந்த மாதிரி உதவனுமுன்னு நினைக்கிறீங்க?

செக்சன் 377 மட்டும் எங்களுக்கு வாழ்க்கை இல்லை. அதனால் காவல்துறையின் அராஜகம் நிறைய நடக்கிறது. அதனால் சட்டப் பாதுகாப்பு கேட்டு நாங்க போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சட்ட ரீதியான சிக்கல் என்னவென்றால் ஒரு மனிதனின் நடவடிக்கைகள் மாறவேண்டும் என்றால் அவனது அறிவு மேம்பட வேண்டுமென்றால் அதுக்கு கல்வி முக்கியம். இன்றைக்கு நிறைய பேர் 10, 12 வகுப்புவரை படிச்சவங்க இருக்கிறார்கள். படிச்சிட்டு இன்றைக்கு திறந்தவெளி பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அதில் படிக்க வேண்டுமென்றால் பிராக்டிகலா சில கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம். ஸ்கூல் டிசி கொண்டு வா என்று கேட்பார்கள். நிறைய பேரிடம் டிசி இருக்காது. வீட்டிலேயே விட்டு வந்திருப்பார்கள். தப்பித்தவறி ஒரு சிலரிடம் இருக்கும் அவர்களை கூட்டிப் போய் நின்றால் ஸ்கூல் டிசியில என்ன பெயர் இருக்கு. என்ன பாலினம் இருக்குன்னு பார்ப்பாங்க. அன்னைக்கு நான் ஆணாக இருந்திருக்கேன். இன்றைக்கு பெண்ணாக மாறிட்டேன். எனக்கு படிக்கணும் இடம் கொடுங்கன்னு கேட்டா சட்டத்தில் இடம் இல்லை என்பார்கள். அதனால் அங்கேயும் சட்ட சிக்கல்தான்.

கேள்வி : உலக நாடுகளில் வந்து அரவானிகள் நிலை எப்படி உள்ளது?

அங்கே இந்த மாதிரியான descrimation எல்லாம் இல்லை. வேறு வழிகளில் இருக்கு. வேலை வாய்ப்புகளோ மற்றதெல்லாம் மறுக்கப் படவில்லை. முரண்பாடுகள் நிறைய இருக்கு. அமெரிக்கா, யுகே ஆகிய நாடுகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் பாலினம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். விஞ்ஞானம் முன்னேற்றமாகி இருக்கு. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொள்ளலாம். மைக்கேல் ஜாக்சன் மாதிரி விதவிதமாக முகத்தை மாற்றிக் கொள்ளலாம். செயற்கை மார்பகம் உண்டாக்கிக் கொள்ளலாம். எல்லாம் செய்து கொள்ளலாம். ஆனால் அரசாங்கத்தின் சட்டப்படி இந்திய நாட்டைத் தவிர எல்லா நாடுகளிலும் குடிமகனுக்கு அடையாள அட்டை என்பது கண்டிப்பான ஒன்று. இரவு நேரத்தில் எங்கேயாவது போய்க் கொண்டிருந்தால் போலீஸ்காரன் சந்தேகப்பட்டு கேட்டால் அவன் கண்டிப்பாக அடையாள அட்டையை காட்ட வேண்டும். அட்டை கையில் இல்லையென்றால் அடையாள அட்டையின் சரியான எண்ணை சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவனை விசாரணைக்கு கொண்டு போய் வைத்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அது கிடையாது. அங்க அந்த நாடுகளில் என்ன சொல்கிறார்கள் என்றால் நீ எப்படி வேண்டுமானலும் இரு. என்னுடைய ரிக்கார்டு படி நீ ஆண்தான். அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் இந்த மாற்று பாலினம்ன்னு வரும் போது இந்தியாவில் மட்டும்தான் ஆணிலிருந்து பெண் அப்படின்னு நினைக்கிறோம். ஆனால் பெண்ணிலிருந்து ஆணும் இருக்கு. மாற்று பாலினம் என்பது வந்து ஆணிலிருந்து பெண்ணுக்கும், பெண்ணிலிருந்து ஆணுக்கும் என்ற இரண்டையும் அடக்கியது. அடையாள அட்டையை மாற்றிக் கொடுன்னா அவன் மாற்ற மாட்டான்.

அரசு ஆவணத்தில் உனக்கு என்ன பாலினம் அதுதான் கடைசி வரைக்கும். சமீபத்தில் சென்னைக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு அரவானி வந்திருந்தாங்க. அவங்க பெயர் வந்து எலிசபெத் ஜெம்பர்ட்ஸ். ஆனால் அவர்களுக்கு பாஸ்போர்ட்டில் ஜான் ஜெம்பர்ட்ஸ் என்று போட்டிருக்கிறது. அதை அவன் மாற்ற மாட்டான். டிரைவிங் லைசன்சில் இருந்து எல்லாமே வந்து எல்லாவற்றையும் மாற்ற முடியாது என்ற பிடிவாதமாக இருக்கிறார்கள். சில நாடுகளில் வந்து வித்தியசமாக இருக்கிறது. இத்தனைக்கும் மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. மலேசியாவில் என்ன செய்கிறார்கள் என்றால் நான் சர்ஜரி பண்ணிக்கிட்டேன் நான் பாலினம் மாறிட்டேன் என்று ஒரு அப்ளிகேசன் எழுதி அத்துடன் டாக்டர் சர்டிபிகேட், சைக்காலஜிஸ்ட் ஒப்பினியன், என்டொகொனாலாஜி மருத்துவரோட சர்டிபிகேட் இணைத்து கொடுத்து விட்டால் பழைய அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு புதிய அடையாள அட்டையைக் கொடுக்கிறார்கள். அதில் மாற்று பாலினம்.பெண்ணுன்னு குறிப்பிட்டு கொடுத்து விடுகிறார்கள். இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு இங்கு குழப்பங்களும் முரண்பாடுகளும் நிறைய உள்ளது. அதனால் ஒவ்வொன்றுக்கும் அரசாங்கத்திடம் போய் சாதிக்க வேண்டியது உள்ளது.

எனக்கு பாஸ்போர்ட் வந்து ‘இ’ என்று கொடுப்பதாக சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருந்தாலும் முதல்ல சொன்ன மாதிரி ‘அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை’ அப்படின்னு வாங்கிக்கிட்டேன். ‘இ’ அப்படியிங்கிற பிரிவு என்றால் Eunuch. Eunuch என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை. ஆங்கில அகராதி எடுத்துப் பார்த்தால் Eunuch என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால் castrated male அதாவது ‘ஆணுறுப்பு நீக்கப்பட்ட ஆண்’ அவ்வளவுதான். ஆனால் நாங்கள் வெறும் ஆணுறுப்பு நீக்கப்பட்ட ஆணில்லையே. அடிப்படையாக நான் என்னை மாற்ற வேண்டும் என்றுதானே பெண்ணாக வெளியில் வருகிறேன். அப்ப யாரு? Eunuch என்ற கேள்வி இயற்கையா வரத்தான் செய்யும். மொஹலாய சாமராஜ்யம் இந்தியாவில் இருந்தப்போ ஒரு பழக்கம் இருந்தது. நல்ல திடகாத்திரமான அடிமைகளையோ ஆண்களையோ தேர்ந்தெடுத்து அவர்களின் ஆணுறுப்பை நீக்கி விட்டு, அந்தப்புறத்துக்கு காவலாக வைத்து விடுவார்கள். அங்கு பாலியல் பலாத்காரமோ பாலியல் விசயங்களோ நடக்கக் கூடாதுன்னு அப்படி செய்துள்ளார்கள்.

‘அது இருந்தாதானே நீ பண்ணுற, அதையே எடுத்திடுறேன்னு’ ஆணுறுப்பை நீக்கி விடுவார்கள். அவர்களுக்கும் பெண்ணியத்திற்கும் அதாவது பெண் தன்மைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது. அவர்கள் ஆண்தான். அந்த வகையில் மாவீரன் மாலிக்காபூர் மதுரை வரைக்கும் வந்து ஜெயிச்சிட்டுப் போன மொஹலாய பேரரசன். அவன் அடிமையாக இருந்துதான் அரசனானான். இப்ப என்னுடைய வாதங்கள் நியாயமாக இருக்குமென்று நினைக்கிறேன். நான் கேட்பது transgender அல்லது transexual.Transexual என்பது transition period இருப்பவர்கள் transexual. முழுவதுமாக மாறிய பின் அவர்கள் transgender. இது பூனைக்கு யாரு மணிக் கட்டுறது என்கிற கதைதான். இப்படி ஒவ்வொரு பிரச்சனையாக கொண்டு போய்க்கிட்டிருக்கோம். அதுதான் முதல்லயே சொன்னேன். கடந்து வந்த பாதைகள் கொஞ்சம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அதை நினைத்தால் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது.

கேள்வி : ஊடகங்களின் பார்வைக்கு வந்த பிறகும் தமிழ்நாட்டில் அரவானிகள் மீதான பார்வை வந்து அதிக அளவில் மாறவில்லை. இதை நடைமுறையில் பார்த்திருப்பீர்கள் இதையொட்டி கேள்வி என்னவென்றால் தமிழ்நாட்டு அரவானிகளுக்கும் பிற மாநில அரவானிகளுக்கும் என்னவிதமான வேறுபாடுகள் உள்ளன?

அரவானிகள் அப்படின்னு சொன்னால் பாலியல் தொழில் செய்கிறவர்கள், கடை கடையாக சென்று காசு வாங்குபவர்கள் அப்படின்னு ஒரு நடைமுறைக்கு வந்து விட்டார்கள். இது வட பகுதி தமிழ்நாடு அதன்பின் கர்நாடகாவின் பெங்களூர், மகாராஷ்டிராவில் மும்பை இந்த மூன்று இடத்தைத் தவிர மற்ற இடங்களிலெல்லாம் வந்து வாழ்க்கை முறை வேறு பட்டிருக்கும். எப்படியென்றால் வடநாட்டவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம். இன்னைக்கும் சிவா என்றால் கையெடுத்துக் கும்பிடுவார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை என்னவென்றால் இவர்களெல்லாம் கடவுளால் வித்தியாசமாக படைக்கப் பட்டவர்கள். அப்படியென்றால் இவர்கள் கடவுளின் குழந்தைகள். இவர்களை நாம் அசிங்கமாக நடத்தி இவர்கள் எதுவும் சாபம் விட்டால் அந்த சாபம் நமக்கு பலித்து விடும் என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தாலோ நல்ல காரியம் நடந்தாலோ, கடை ஆரம்பித்தாலோ இவர்கள் வந்து வாழ்த்தி விட்டுப் போனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்; வியாபாரம் ஒழுங்காக நடக்கும் என்ற நம்பிக்கை. அதனால் அவர்களுக்கு பணம் நிறைய கொடுக்கிறார்கள். வடநாட்டில் பணப்புழக்கம் நிறைய உள்ளது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அதிலேயும் மக்களுடைய சுயநலம் ஒன்று இருக்கிறது. ஆண் குழந்தை பிறக்கிற வீட்டில்தான் முக்கியத்துவம் அதிகம். பெண் குழந்தைகள் பிறக்கிற வீட்டில் பணம் குறைவாகத்தான் கொடுப்பார்கள்.

ஆண் குழந்தையை இவர்கள் இந்தி மொழியில் இந்த ஜென்மம் நான் இப்படி எடுத்திட்டேன். இந்த குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது என்னை மாதிரி ஆகக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிப் பாடி வாழ்த்துவார்கள். அங்கேயும் அவர்களின் சுயநலம் தானே. டெல்லி மாதிரி நகரத்தில் ‘பதாய்’ என்று சொல்லிட்டு ஒரு வியாபாரம் துவங்கினால் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் மற்றும் ரெகுலராக வாராவாரம் அல்லது அமாவாசை வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை வந்து இவர்கள் பூசை போட்டுவிட்டுப் போனால் வியாபாரம் நிறைய நடக்கும் திருஷ்டி இருக்காது என்று ஆயிரம், ஐநூறு கொடுத்து அனுப்புவார்கள். அங்கு அது மாதிரியான ஒரு வாழ்க்கை முறை. தமிழன் வந்து எல்லாரையும் விட புத்திசாலி. உடல் ஊனமுற்ற ஒருவன் வருகிறான் என்றால் உடல் குறையைச் சொல்லித்தான் ஒருவனை தமிழ்நாட்டில் கிண்டல் செய்வார்கள். அதை குறியீட்டுச் சொல்லாகவே மாற்றி விடுவார்கள். அதே நிலைதான் அரவானிகளுக்கும். “அரவானிகளை அங்கீகாரம் பண்ணமாட்டேன். உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ வந்து பாலியல் தொழிலுக்குத்தான் லாயக்கு” என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கிறார்கள். அதே கண்ணோட்டம் இவனுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கும் வக்கிரமான பாலியல் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக மாத்திட்டாங்க. ஏன் மனைவிகிட்ட நார்மலாக hetrosexual தான் நடந்துக்க முடியும். இவனுடைய வக்கிரமான சிந்தனைக்கு animal sex வேணும் oral sex வேணுமுன்னு கேட்டா அவள் செருப்பால் அடிப்பாள். அப்படின்னா யாரு கிடைப்பாங்க. பாவம் சோத்துக்கு வழியில்லாம நூறு இருநூறு எங்கையாவது கிடைக்குமான்னு வாழ்க்கையே பிரச்சனையா ஓட்டுற அரவானிங்க வந்து இவர்களுடைய வக்கிரமான உணர்ச்சிகளுக்கு வடிகாலா மாறிடறாங்க. அப்பொழுதெல்லாம் இவன் கண்ணோட்டம் மாறிப் போய் விடுகிறது. அவனுடைய பாலியல் தேவை தீருகிற வரைக்கும் முதல் நாள் இரவு அவள்கிட்ட போயிருக்கும் போது என் செல்லம், என் கண்ணு, என் புஜ்ஜுன்னு கொஞ்சியிருப்பான். மறுநாள் அவளை சாலையில பார்த்தான் என்றால் பிரண்ட்ஸ்சோட சேர்ந்து கொண்டு டேய் பொட்டப்பையன் வர்றாண்டா என்பான். முதல்நாள் இரவு அவள் கிட்டதான போன. இப்ப என்ன ஆச்சு?

கேள்வி : உங்களுடைய ‘ஜமாத்’ அமைப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

மனிதன் வந்து கூடி வாழும் இயல்பினன். சொந்த பந்தங்கள் இல்லாம இவனால் தனியாக வாழவே முடியாது. ஆனால் உலகத்தில் மற்ற நாடுகளில் உள்ள transgender எல்லாம் தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய இந்திய மண்ணில் மட்டும்தான் குடும்ப ரீதியா சூடோ பேமிலி சிஸ்டமுன்னு ஆங்கிலத்தில் சொல்வார்கள். பிறந்த குடும்பத்திற்கு சமமாக இந்த அரவானிகள் சமுதாயத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி தத்தெடுக்க காரணம் என்னவென்றால் மாரல் மானிட்டர் சப்போர்ட். எனக்கு ஒரு பொண்ணு இருக்கானு சொல்லிக்கிடுவாங்க. ஒரு clusterராக வாழும்போது எங்களுக்குள் ஒரு உறவு உண்டாகி விடுகிறது.. எங்களுக்குள்ள நாங்க தத்து எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரவானின்னு வச்சிக்கிட்டா நான் பஞ்சாப் போகிறேன் என்றால் பஞ்சாபில் என்னைப் பார்த்தவுடன் எனக்கு பாஷைத் தெரியவில்லை என்றால் கூட நீ எங்கிருந்து வருகிறாய் ‘கோன் ஹை’ என்று கேட்பார்கள். தமிழ்நாடுன்னு அரைகுறை இந்தியில் சொன்ன உடனேயே நீ யாருன்னு கேட்பாங்க. யாருடைய சேலா என்று கேட்பார்கள். யார் உன் அம்மா? அதாவது குரு யாருன்னு கேட்ட உடனேயே நாம் யாருன்னு சொன்னா அது ஒரு அங்கீகாரம். அதுதான் இந்த சமுதாயத்திற்கு ஒரு மரியாதையைக் கொடுக்கும். எங்க சமுதாயத்தில் அல்லாமல் பொது சமுதாயத்தில் இருந்தும் நாங்க தத்து எடுக்கிறதுண்டு.

No comments: