1
---------------------
வார்த்தைகளால்
காயப் படுகிறாய்
செயல்களால்
சிதைந்து போகிறாய்
மன்னிப்பும்
சமாதானங்களும் கூட
வர்க்க யுக்தி என்கிறாய்
என்னைக் கொல்ல
இயலாது
உன்னை வருத்துகிறாய்
கைகளை இறுக
பிடித்துக் கொண்டு
ஆழியில் தள்ள முனைகிறாய்
பேச மறுக்கிறாய்
ஈச மறுக்கிறாய்
ஒன்று செய்
தினமும் காரி உமிழ்
திக்கச் சமூக நிறம்
கழுவி வெளுக்கிறேன்.
2
பண் பட்டதல்ல
என் மொழி
பழக்கப் பட்டதல்ல
இவ்வுறவு
என் பிழைகளை பொறு
தவறுகளை சகி
3
மொழி தெளிந்தவனல்ல
வழி தெரிந்தவனுமல்ல
பழி சொல்லி
பிரியாதே நாளும்
முடிந்தால்
என் மொழி திருத்து
என் வழி திருத்து
தனிமை
இனிமையல்ல உனக்கு
தனிமை
இனிமையல்ல எனக்கு
தனிமை
இனிமையல்ல நமக்கு
தனிமை
இனிமையல்ல எவர்க்கும்
5
ஆதிக்க நாற்றமடிக்கும்
வார்த்தைகளை கழுவு
என் வாயை வெறுக்காதே.
ஆதிக்க நரம்புகளை
மூளையிலிருந்து பிடுங்கு
என் உடலை வெறுக்காதே
ஆதிக்க செயல்களை
என்னிலிருந்து களை
என்னை ஒதுக்காதே
உன் கையில் நூல்கள்
ஆட்டுவித்துக்கொள்
தலைமுறை கோபம்
தனிந்து கொள்
வெறுக்காதே- விலகாதே- ஒதுக்காதே.
6
யாரோ ஒருத்தருக்காக
சண்டையிட்டாயிற்று
யாரோ ஒருத்தருக்காக
பிரிந்தாயிற்று
யாரோ ஒருத்தருக்காக
கோபித்தாயிற்று
யாரோ ஒருத்தருக்காக
மகிழ்ந்தாயிற்று
யாரோ ஒருத்தருக்காக
கவலைப்பட்டாயிற்று
யாரோ ஒருத்தருக்காக
---------------------
யாரோ ஒருத்தருக்காக
---------------------
எஞ்சிய இறுதிப் பொழுதுகளில்
நமக்காக
வாழ்வோம் வா....
7
மெளனவெளி
உடைக்க
எதாவது சொல்
சொல்லிவிட்டதெல்லாம்
பொய்களே
உண்மைகள் எப்பொழுதும்
சொல்லப்பட்டதில்லை
எதுவும் சொல்லக் கூடாது
எனவே தோன்றும்
எப்பொழுதும்
ஆனாலும்
அச்சுறுத்துகிறது அமைதி
அதனால்
சொல்லி விடுவோம்
எல்லாவற்றையும்
பொய்களாய்
பொய்களாய்.
8.
நிகழ்வுகளை
நினைப்புகளை
விவரிக்க
பொறுத்தமான
போதுமான
சொற்கள் இன்றி
தடுமாறியிருக்கிறேன்
ஒற்றெழுத்து
ஒற்றைச் சொல்
சலவைக்கல் வாசகம் என
விதவிதமாய் வெளிப்படுத்தி
விட்டார்கள்
அண்டம் முழுதும்
அப்பியிறுக்கும்
ஆற்றல்மிகு
மெளனச் சொல்லால்
உணர்த்தப் பார்க்கிறேன்
என் உயிர் குடையும்
உணர்வுகளை.
9
எத்தனை முறை
சொல்ல எத்தனித்திருக்கிறேன்
எப்பொழுதாவது
சொல்லிவிட வேண்டும்
என்பதால்
பழைய, புதிய
நவீன, அதிநவீன
என வகையாய்
ஏடுகள் பல புரட்டி
சேகரித்திருக்கிறேன்
காதல் தோய்ந்த
சொற்களை
இத்தனை சொற்களில்
என்னை வெளிப்படுத்த
ஏதுவான சொல்லெதுவென
எங்ஙனம் தேர்வது ?
10
நீ உதிர்த்த
அத்தனை சொற்களையும்
சப்பித்திரிகிறேன்
உன் உமிழ் நீர்
ஊரிய சொற்கள்
வாங்க
வாய் பிளந்து
நிற்கிறேன்
என் முன்னிலை தவிர்த்து
தன்னிலை சுகிக்கும் நீ
என்னிலை அறிய
என்று முனைவாய் ?
11.
மொழிகள் பல
சொற்கள் கோடி
சொற்கள் இணைந்து
இரட்டிப்பாகிறது
சொற்கள்
எதிரொலித்து வருகிறது
எக்கச்சக்கமாய்
சொற்கள்
பிறமொழி கலந்து
தனிமொழி ஈணும்
சொற்கள் பலபல
இத்தனை இருந்தும்
அத்தனை சந்திப்புகளிலும்
மெளனித்து விடுகிறாய்
மனதை கல்லாக்கி.
1 comment:
ஆகா! வார்த்தைகளால் மனம் பிசைந்திருக்கிறீர்கள்!
மிக அருமையான உணர்வுகள்
மிக நேர்த்தியான வெளிப்பாடு.
மிகவும் ரசித்தேன்!
Post a Comment