அவசியமற்றக் குறிப்பு
-------------------------
மென் கருப்பாய்
அடர் கருப்பாய்
கிளையிடுக்கில்
விறைத்து வளரும்
நுனியில் சிறுத்து
கூர்மையாய்
குத்தலாம்
சொருகலாம்
கிழிக்கலாம்
குருதி சிந்த
வைக்கலாம்
மறைந்து கிடக்கும்
எப்பொழுதும்
நெரிகட்டிக் கொள்ளும்
நெறிஞ்சிக் குத்தலில்
குத்திக் கொள்வதுதாம்
நூறு சதம்
குத்திவிட்டதென்பதும்
நூறு சதம்
சத்தியமாய் இது
முள் பற்றியக்
குறிப்புதான்.
மதியழகன் சுப்பையா
மும்பை.
அனல் வேலி
---------------
வார்த்தைகளில்
பார்வைகளில்
தீண்டல்களில்
எங்கும் பரவ
விட்டிருக்கிறாய்
தகக்கும் அனலை
நெருங்க முடிவதில்லை
எப்பொழுதும் எரிகிறாய்
தனியமாட்டாய்
அணைய மாட்டாய்
என்னென்றும்
யாரும்
நெருங்கக் கூடாதென
எழுப்பிதுதான்
இந்த அனல் வேலி
நீரூற்றிச் சோர்கிறேன்
நித்தம்.
மதியழகன் சுப்பையா.
மும்பை
---------------------------------------------------------------
மந்த தகனம்
---------------
புலன்களிலா
உணர்வுகளிலா
தெளிவாய் தெரியவில்லை
உடல் துவாரங்கள்
வழியாய் கிளம்புகிறது
சுருள் புகை
அருகே வருவதில்லை
அவளும் கூட
கூட்டத்தில்
யாரோ ஒருத்தியின்
பருத்த புட்டம் நோக்கி
விறைத்து நீள்கிறது
என் ண்மை
மதியழகன் சுப்பையா,
மும்பை.
-------------------------------------------------------------
காலை கமகமத்து துவங்கும்
வணக்கப் பரிமாறல்களில்
அழைத்தாயா? என்று
கேட்போம் அழைத்து
நினைத்தாயா? என்று
கேட்க நினைவிருப்பதில்லை
பார்ப்போமா? என்று
கேட்க பயமாயிருக்கிறது
கோபமா? என்று
கேட்கிறோம் குலைந்தபடி
சாப்பிட்டாயா? என்று
கேட்கவே பசிக்கிறது
பத்திரம்டா ! என்று
சொல்லத் தவறுவதில்லை
மன்னித்திடு! என்று
கூற மறப்பதில்லை
நன்றி! என்று
சொல்லாமல் முடிவதில்லை
புள்ளிகளால்
நிறைகிறது கோடு
அந்தியில்
சிவக்கிறது வானம்.
மதியழகன் சுப்பையா,
மும்பை.
----------------------------------------------------------------
கண்ணில் உருத்துகிறது
சிறு துரும்பு
உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை
செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை
உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல
புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல
நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.
விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்
விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்
தரிகெட்டோடுகிறது
காமப் புரவி
மதியழகன் சுப்பையா,
மும்பை.
------------------------------------------------------------------
பிரியாணி பொட்டலத்துக்கு
படுத்துக் கொள்கிறாள்
ஒருத்தி
பெருஞ் செல்வத்தை விட்டு
நொண்டிப் பயலோடு
ஓடிப் போகிறாள்
ஒருத்தி
ஒரு புள்ளையும் தன்
புருசனுக்கு பெறவில்லையாம்
ஒருத்தி
ஊரூறாய் மேய்ந்தாலும்
வீடு வந்து அடைகிறாள்
ஒருத்தி
பிள்ளைகள் பசியாற
பசி மறக்கிறாள்
ஒருத்தி
சந்துக்கு ஒருத்தனோடு
சம்போகம் செய்கிறாள்
ஒருத்தி
மற்றொருத்தியை
பிடித்தில்லை
ஒருத்திக்கு.
மதியழகன் சுப்பையா,
மும்பை.
---------------------------------------------------------
வந்து கொண்டும்
போய்க் கொண்டும்
இருக்கிறது பறவைகள்
எலிகளுக்கும்
கரையான்களுக்கும்
தெரிவதேயில்லை
புத்தகத்தின் மதிப்பு
பெய்தும் கெடுக்கிறது
பெய்யாமல் கெடுக்கிறது
பெருமழை! பெருமழை!
நிற்காமல் ஓடுகிறது
மின் தொடர் வண்டிகள்
நின்றபடி போகிறார்கள்
நிற்கதியற்றவர்கள்
பள்ளிக்குப் போகிறார்கள்
மாணாக்கர்கள்
பணிக்குப் போகிறது
சிறார்கள்! மழலைகள்
பெத்துப் போடுகிறாள்
பெரிய அன்னை
பிச்சை எடுக்கிறான்
எங்கப்பன்.
மதியழகன் சுப்பையா,
மும்பை.
No comments:
Post a Comment