Wednesday, September 06, 2006

பேசுவது குறித்து சில.............


1

மற்றவர் பற்றி
மணிக்கணக்கில்
பேசுகிறாய், விசாரிக்கிறாய்

பிடித்தவைகளை
கேட்காமலேயே
சொல்லுகிறாய்

டம்பரவாழ்வு பற்றி
எதிர்காலத்தேவை பற்றி
இப்படி
என்னென்னமோ

அவ்வப்போது
'கேக்குறீயா?'
என உற்றுப்பார்க்கிறாய்.

எவர் பற்றியும்
பேசாத என்னிடம்
எல்லோரைப் பற்றியும்

எக்கச்சக்கமாய்
................
................
எரிச்சலூட்டுகிறாய்

என்னைப் பற்றி
யாரிடமாவது
என்றைக்காவது
எப்பொழுதாவது?
2

பேசுகின்ற
செய்கின்ற
அனைத்தும்
ரொம்பப் பிடித்திருக்கிறது
அதனால்தான்
மறுக்கிறேன்.


3

பேசித்திரும்புகையில்
செய்துத்திரும்புகையில்
இப்படியும்
பேசியிருக்கலாம்
செய்திருக்கலாம் என்றும்
தவறு நேர்ந்திருந்தால்
தவிர்த்திருக்கலாம் என்றும்

கைத்தொட்டுத்
திரும்புகையில்
கட்டிப் பிடித்திருக்கலாம் என்றும்

வாய்ப்புகளை
நழுவவிட்ட பின்

அழுகிறது மனம்
அடுத்து வரும்
வாய்ப்புகளை
அறியாமலேயே.
4
இது இரைச்சல் காடு
காது நிரம்பி சத்தங்கள்

மனிதர்கள்
மிருகங்கள்
விணைப் பொருட்கள்
எல்லாமே ஒலி
எழுப்பியபடி

உறுப்புகளும்
உதிரிகளும்
உரக்க உரக்க

புலப்படாதவைகள்
புரியாதபடி ஒலிக்கிறது

சில ரசிக்கும்படி
சில கடுப்பாக்கும்

அமைதி அமைவதில்லை
எப்போதும்

ஓசையற்றவை
உயிரற்றவையாகக் கூட
உணரப்படுகிறது

ஓசையோடு வாழ்ந்தால்
இசைபட வாழலாம்.
5

கனத்த பூட்டு திறக்கும்
சிறிய கம்பிகள்

துளியே போதும்
க்க அழிக்க

மயிரிழையில்
உயிர் பிழைக்கிறோம்

சில்லரைகளும்
அவசியமாகிறது
எப்போதும்

வார்த்தையோ
வாக்கியமோ
வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
6

காத்திருக்கையில் கூட
கனவாய் பேசிக் கொள்வது
போன்றதொரு உணர்வு

எதிரெதிரேயாய்
இடதுவலதாய்
என எல்லா நிலைகளிலும்
பேசிவிட்டிருக்கிறோம்

நீ கேட்க நான் சொல்ல
நான் கேட்க நீ சொல்ல
மணிக்கணக்காய்
மகிழ்ந்திருக்கிறோம்

பாராமல் கூட பல முறை
கடிதம், தொலை பேசியில்
கதைத்திருக்கிறோம்

உனக்காக ஒருத்தனையும்
எனக்காக ஒருத்தியையும்
பேச பணித்திருக்கிறோம்

எதுவும் பதியவில்லை
பேசிப் பிரிகையில்
நீ இறுக பிடித்து
பதிந்து போன விரல்
ரேகைத் தவிர.
7

வணக்கம் சொல்லி
சந்திக்கையிலும்

வருகிறேன் என
விடைபெறுகையிலும்

இயல்பாய் பேசி
விலகுகிறாய் நீ

இயக்கமே தடைப் பட்டு
நிற்கிறேன் நான்.

No comments: