Friday, September 15, 2006

ஆதாமின் மரபணுக்கள் என்னிலும்

1

உன் ஞானப் பார்வையின்
கூர்மை பட்டு
கிழிபடுகிறதென்
பொய் முகம்

என்னைக் கடந்தவர்கள்
ஒட்டிவிட்டுப் போன
முகங்களையும் கிழி

அடியில் கிடைக்குமென்
மெய் முகம்

அதிலுமென் ஆணவம்
கண்டால்

இதை நான்
மரபில் பெற்றேன்
என்பதை உணர்
----------------------------------------
2
அம்மாவை பிடிக்கும்
அண்ணன் தம்பி
அத்தனை பிரியம்
தோழமைகளே உன்
பலம் - பலகீணம்

உன் விருப்பப்படி அவர்களும்
அவர்கள் விருப்பப்படியே நீயும்

தவறாத தொலை பேச்சிலும்
சந்திப்பிலும் மகிழ்வாய்

உறவுக்கேற்ப கொடுத்து
விடுகிறாய் அன்பை

விசாரிக்கப் படாமல்
கிடக்கிறது என் காதல்

--------------------------------------

3
· குறைகளை சுட்டுகையில்
கோபப் படுகிறாய்
வார்த்தைக்கு ஒரு முறை
மன்னிப்பு கோருகிறாய்
பிரிந்து விடுவேனோ என
பயப்படுகிறாய்

அதிகம் பேசாமலிருக்க
நாக்கு கடிக்கிறாய்

ஊடலில் முடியும் சந்திப்புகளை
தவிர்க்கிறாய்

விலகி நின்று
காமம் அடக்குகிறாய்

தொடரும் இவ்வுறவில்
மகிழ்வதாயும் கூறுகிறாய்.

--------------------------------------------

4
· இது பேசாதே
இப்படி செய்யாதே

இது பேசு
இப்படி செய்

வேண்டிக் கொள்கிறாய்
தினமும்

பிழைத்து விடுகிறேன்
ஒவ்வொரு முறையும்

மீண்டும் தருகிறாய்
வாய்ப்புகளை
களைத்துப் போகும்
ஒரு நாளில்
விலகிப் போவாய் நீ
அழுகி சாவேன் நான்.

-------------------------------------------

5
· பொழுதின்
மிக நுண்ணிய பகுதியும்
கழிவதில்லை
உன் நினைவுகளின்றி
----------------------------------------


·

No comments: