வெளிச்சம் பார்த்தோடும்
விட்டில் பூச்சியாய்
அறைகளால்
கவரப் பட்டுருக்கிறேன்
சிறிய பெரிய
அகன்ற குறுகிய
வண்ண வண்ண
பருத்த சிறுத்த
பால் வேறுபாடுடைய
பலவகை அறைகள்
சிலந்தி வளையில்
சிக்கிய பூச்சியாய்
அறைகளில் மோதி
அறைக்கறை தாவி
மூச்சுத்திணறுகிறேன்
எத்தகை அறையாயினும்
எவ்வகை அறையாயினும்
கதவினைப் போல்
கரம் திறப்பாய்
காப்பாய் ; மீட்பாய்
நீயே அறையாகிப்
போனாய் இன்று.
சதுர உலகத்திற்குள்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
எறும்புகளை நசுக்குவதும்
ஈக்களை விரட்டுவதும்
கொசுக்களை கொல்வதும்
இப்படியாய்
பராக்கிரமங்களை
பழகிக் கொண்டிருக்கிறேன்
முட்டினால் உடையும்
எக்கினால் தெரியும்
நக்கிக் கொண்டிருக்கிறேன்
கனமாய் ; குணமாய்
கூறாய் ; வாகாய்
யுதங்களும் அடைக்கலமே
உப்பூறும் சுவரையும்
சதுர வானத்தையும்
துணையாய் கொண்டேன்
சுவர் தாண்ட முடியும்
அறை மீள முடியும்
மனம் மீற முடிந்தால்
குளிரென்றால்
கடுங் குளிரே
வெயிலென்றால்
கொடும் வெயிலே
மழையென்றால்
கன மழையே
பருவ மாற்றம்
சாத்தியம்
எளிமையும் ; கடுமையும்
அனைத்திலும் உண்டு
நடுமைதான்
நாம் விரும்புவது
வாய்ப்பதைக் கொண்டு
வாழ வழி தெரியாது
காய்ப்பதெல்லாம்
பழுக்கத்தான் வேண்டுமா?
அறை வாழ்க்கை
குறை வாழ்க்கை
அறை மீட்சி
அமைந்து விட்டால்
நிறை வாழ்க்கை நிச்சயம்
மதியழகன் சுப்பையா
No comments:
Post a Comment