Friday, November 10, 2006

அணி-3 ( கவிதைக்கான இதழ்)

மக்களின் கைகள்
கவிதையில் காணப்படவேண்டுமென்று
நான் எப்போதும் விரும்பினேன்
விரலடையாளங்கள் தென்படும்
கவிதையே என் விருப்பம்.
நீரின் பாடல் ஒலிக்கும்
பச்சைமண்ணின் கவிதை
எல்லாரும் உண்ணக்கூடிய அப்பத்தின் கவிதை
பாப்லோ நெரூடா

------------------------------------------------------------------------

ருசி பல வென்றுணர்
தமிழ் கூறும் நல்லுலகின் படைப்பாளிகளிடமிருந்து அணிக்கு கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும் ஊக்க உற்சாகமூட்டுவன.

ஜீவஜோதி, ஜோதிகா திருமணம் முடிந்து விட்டது இனி யாருக்கு கல்யாணம் செய்யும் வணிக இதழ்கள்? பாவந்தான்!

சில படைப்பாளிகளின் "ஒரே படைப்பு' வேறு வேறு இதழ்களில் வெளியாகியிருப்பது குறித்து எழுந்த சிந்தனை இது. படைப்பாளியின் ஒரே படைப்பை, வெளியிட இணைய இதழ்கள் ஏற்கும் போது அச்சு ஊடகங்களும் ஏற்கலாகாதா...?

படைப்பாளிகளுக்கும் தனது படைப்பு வேறு வேறு இதழ்கள் வழியாக விரிவான வாசக தளத்தை சென்றடையும் ஆசை இருக்காதா?

"நன்றியுடன்' சில படைப்புகள் எடுத்தாளப்படும் போது ஒரே படைப்பு ஏன் இரு வேறு இதழ்களில் வெளியிடப்படக் கூடாது?

சிற்றிதழ்களும் படைப்பின் ஏற்பை / இயலாமையை உடனடியாக தெரிவித்தல் நலமன்றோ.

அணியின் படைப்பாளிகள், படைப்புகளோடு அஞ்சலட்டை இணைத்து அனுப்பினால், உங்கள் படைப்புகளின் "கதிமோட்சம்' உடனடியாய் தெரியவரும். இது உறுதி.

இராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது மற்றும் கவிக்கோ விருது பெற்றிருக்கும் கவிஞர் சிற்பி கவிதையின் சமகாலத்தில் இயங்குபவர்.

கிராம பெண்கள் ஊக்ககம் போளூர் வழங்கிய
"தலித் பெண்ணியச் சிந்தனையாளர்' விருது பெற்றிருக்கும் முனைவர் அரங்க. மல்லிகா
தலித் பெண்ணியம், தலித் விடுதலை குறித்து சிந்திப்பவர், தொடர்ந்து இயங்குபவர்.

"சங்கு' வளவ துரையனின், "தேரு பிறந்த கதை' சிறுகதை நூலுக்கு ஒரே நேரத்தில் மூன்று விருதுகள்.

விருதுகள், மற்றவர்களை நம் பக்கம் திரும்ப வைப்பவை தொடர்ந்து கவனிக்க வைப்பவை. இனிமேலும் சிறப்பாக இயங்க ஊக்குவிப்பவை.

விருதாளர்களை, வாசகர்களோடும், படைப்பாளிகளோடும் அணியும்
மனதார பாராட்டி மகிழ்கிறது.

எதிர்வரும் அணி 4,
பெண் கவிஞர்கள் சிறப்பிதழ்.
படைப்புகளை வரவேற்கிறோம

அன்புடன்,

அன்பாதவன் மதியழகன் சுப்பையா


--------------------------------------------------------------------------------

கிழக்கும் கிழிந்த காகிதச் சுருளே

கிழிசல்ளோடு
பேச்சு வார்த்தைக் நடத்திக் கொண்டிருக்கும்
பழஞ் சாக்குப்பை முதுகில்,
வாழ்க்கையோட சேர்ந்து பாரமாக

இறக்கை முறிந்து விழுந்த
காக்கையைப் போல வாசல் வாசலாய்க்
கொத்திக் கொண்டே போக,

கசங்கிய உறைகள் கடிதச் சிதலங்கள்
பொட்டலக் கிழிவுகள் கண்ட கண்ட காகிதங்கள்

சலவைக்கடை, தையல்,
துணிக்கடைச் சேதாரப் பைகள் எதிலும்
சேகரம் ஆகவில்லை அவனுக்கு
ஒருவேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதம்

அவன் கைக்கு வந்த காகிதங்களில்
இருந்தன
பதவியேற்ற பதவி இழந்த தலைவர்கள் படங்கள்
இருந்தன
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
இருந்தன
கூட்டணி உடைப்புகள் உருவாக்கங்கள்
இருந்தன
காவிகளின் காமத்தீயில் கருகிய பெண்கள் படங்கள்
இருந்தன
கோலிவுட் பாலிவுட் கிசு கிசுப்புகள்

அவன் கைக்கு வராத
காகிதம் எதிலேனும் இருக்கலாம் ஒளிந்து கொண்டு
ஒளிரும் பாரதத்தில் அவனது எதிர்காலம்

வறுமை போட்ட உத்தரவு
பதிவாகியிருந்த
காகிதம் ஒவ்வொன்றிலும்

அரசாங்கம்
இலவசப் பிண எரிப்புக்கு
வாய்ப்பில்லை என்பதையும்
முன்பக்கம் பின்பக்கம் அல்லாத
மூன்றாம் பக்கத்தில் குறித்திருந்தது.

அவன் அந்த மூட்டையைத் தலைக்கு வைத்துக்
களைத்துக் கண்களை மூடும்போது
எல்லாக் காகிதங்களும்
இமை திறந்துப் பார்க்கும்; தென்படும்

அவனுக்கான இருளில்
திகைத்து இமை மூடும்
கனாவில்
மனிதர்கள் காகிதங்களாக
அவன் மூட்டைக்குள் அடைபட
விழிக்கும் வேளை அவனுக்குக்
கிழக்கும் ஒரு கிழிந்த
காகிதச் சுருளே.

தமிழன்பன்
-----------------------------------------------------------------------------

ஹைபுன்கள் அன்பாதவன்


ஓயாதப் பெருமழைக்காய் வீட்டுக்குள்
ஒதுங்கும் புறாக்கள்
சாலை நீரை அளந்த படி ஆடைநனைய
நகரும் மாநகரர்கள்
பேருந்தின் புழுக்கத்தில் தலைவீழ்ந்த
மழை மீறி வியர்த் தொழுகும்
புகையிலைத் தூள் கசக்கி கடைவாய்த் திணித்து
தாமத ரயில் பிடிக்க யத்தனிக்கும் பெருங்கூட்டம்
எதிர்ப்பாதை மூழ்கியதறியாமல்
கண்ணாடி நீர்ப்படிமத்தில் காதலி பெயர்
கிறுக்கு வானொரு விடலை கைபேசி பார்த்த படி
கலந்த பாஷைகள் ஒரு கணத்தில்
அடங்கி மவுனமாகும் மழைத் தீவிரத்தில்
காவி தரித்தவன் காற்றோடு பேசியபடியிருக்க
அஷ்டக் கோணலாய் மாறுகிறது
நடுப்பாதையில் போவதறியாமல் நிற்கிற
ரயிலில் வெளிக்கிருந்தவன் முகம்
எல்லோருக்குமாய்ப் பெய்கிறது இடைவிடாப் பெருமழை.

ரயிலை நிறுத்திப் பார்க்க வைத்து
மழையில் மூழ்கி குளிக்கின்றன
தண்டவாளங்கள்.

மழைவிட்டவுடன் செடிதூவும் சிறுமழையாய்
சிலிர்க்கிறது மனசு
கடுமையானச் சொற்களில் பலரும்
விமர்சித்த கவிதைகளை புரிந்துணர்ந்தாய்
மிகச் சரியாய்
தவமிருந்தேன் இத்தனைக் காலம்
இந்தப் புரிதல், பகிர்தல் உணர்தலுக்காய்
ஒருமையில் அழைக்க ப்ரியப்படும்
சட்டென மலரும் மனநெருக்கம்
மிகக் கொடுமையானது புரிதலில்லா வாழ்வு
நெடிய உறவாயினும்
பயண நட்பெனினும் உணர்தல் உற்சாக மூட்டுவது
புதியப் புரிதல்களோடு
தொடரட்டுமே தோழமை

உஷ்ண வெளிப்பாடுகளோடு நீள்பயணம்
புழுக்கம் தணிக்கும்
புதியக் காற்று.

---------------------------------------------------------------

உலகக் கவிஞர் வரிசை
ஜெரார்டு மான்லே ஹாப்கின்ஸ் ( 1844-1889 )

கிறிஸ்துவ பாதிரியாராகவும் சிறந்தகவிஞராகவும் விளங்கிய ஜி. எம். ஹாப்கின்ஸ் எசெக்ஸின் ஸ்டிராட்பார்டில் எட்டுக்குழந்தைகளுக்கு மூத்தவராக பிறந்தார். இவரது தந்தை லண்டன் நகரில் கடல் பயணக் காப்பீட்டுத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இவரதுகுடும்பம் 1852ல் ஹாம்ப்ஸ்டெட்க்கு குடிபெயர்ந்தது. ஹாப்கின்ஸ் ஹைகேட் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் கலைத் திறமையைப் பெற்றார். தனது "தி எஸ்கோரியஸ்' என்ற முதல் கவிதைக்காக பரிசு பெற்றார். 1863ல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பிரபல மேதை வால்டர் பீட்டரிடம் மாணவனாக பயின்றார் இந்தக் காலக் கட்டங்களில் "ஹெவன் ஹெவன்' மற்றும் "தி ஹாபிட் ஆப் பர்பெக்ஷன்' போன்ற புகழ்பெற்ற கவிதைகள் உட்பட பல்வேறுக் கவிதைகளை எழுதினார்.
தனது பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1866ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். தனது பட்டப் படிப்பு முடிந்தவுடன் ரோய்ஹம்டன்னில் 1870 வரை இருந்தார். பின் ஸ்டோனிஹர்ஸ்டில் (18701873) மறைக்கல்வி கற்றார். 1877ல் கத்தோலிக்க பாதிரியாராக பட்டம் பெற்றார். 1875, டிசம்பர் மாதம், டெவுட்ஸ்லாந்தில் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பயணிகளிடம் மத போதனைகள் செய்ய வேண்டி பணிக்கப்ட்ட பிரான்ஸ்சிய கன்னியாஸ்திரிகள் ஏழு பேர் பலியாகினர். இந்த செய்தி ஹாப்கின்ஸ்க்கு கடுமையான மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. இதன் பாதிப்பில் "த ரெக் ஆப் தி டெவுட்ஸ்லாந்து (1876)' என்ற அமரத்துவமான கவிதையை எழுதினார். இந்தக் கவிதையை கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வெளியிட மறுத்து விட்டன. வாசிப்பவர்களுக்கு இது மேலும் மனக் கஷ்டத்தை அளிக்கும் என்று காரணம் தெரிவிக்கப் பட்டது.
1877ல் அவர் புனிதக் கட்டளை வழங்கும் படிப்புகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த காலங்களில் அவர் கவிதைகளில் சிறந்த மற்றும் அவரது திறமை வெளிப்பட்ட கவிதைகளை எழுதினார் அவைகளுள் "தி விண்டோவர்' மற்றும் "பையிட் பியுட்டி' குறிப்பிடத்தக்கவை. 1884ல் டப்ளின் நகரில் கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் பேராசிரியராக பல்கலைக் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார். இங்கு கடுமையான பணிச் சுமையாலும் நிர்வாகப் பொறுப்புகளாலும் மனச் சோர்வும் உடல் நலக்கேடும் எற்பட்டது. இந்தப் பொழுதுகளில் பயங்கரமான கவிதைகள் என்று குறிப்பிடப் பட்ட "டெரிபல் சோனெட்ஸ்' களை எழுதினார். அவைகளுள் "காரியன் கம்பர்ட்' மற்றும் "நோ வர்ஸ்ட், தேர் இஸ் நன்' போன்றவைகள் உச்சமாக கருதப்பட்டது. தனது கடைசி காலங்களில் "ஹாரி புளாப்மேன் தி நேச்சர் இஸ் அ ஹெராக்கிளிட்டியன் பயர்' மற்றும் "தோ ஆர்ட் இன்டீட் ஜஸ்ட லார்டு' (மார்ச் 1889 ) ஆகியக் கவிதைகளை எழுதினார்.
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு ஜூன் மாதம்1889ம் ஆண்டு மரணம் அடைந்தார் தனது இறுதி காலம் வரை இவர் தனது கவிதைகளை புத்தகமாக்கி வெளியிடவே இல்லை. ஆனால் இன்றும் அவரது கவிதைகள் உலகக் கவிஞர்களின் இதயப் புத்தகங்களில் அழிக்க முடியாதபடி அச்சாகி உள்ளது.
சொர்க்கம் துறைமுகம்

வசந்தங்கள் தவறாத
கடுமை கூர்மையற்ற
ஆலங்கட்டிகள் பறக்காத
லில்லி பூத்திருக்கும்
பசுமை வயல்வெளிகளுக்கு
போக ஆசைகொண்டிருந்தேன்

பனிப்புயல்கள் வராத
பசுமை பொங்கிய
துறைமுக அமைதியில்
கடலின் பேரிரைச்சல் கடந்த
நிலைக்கு வேண்டினேன்.

அந்தக் குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்

அந்தக் குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்
அவன் எப்படி தந்தையாக முடியும்
அவனது வார்த்தைகளில் வன்மம் இருக்கிறது.
மழலையை பறிப்பது அவனது குணமாகிறது
அதனால் குழந்தை அந்த மனிதனுக்கு
தந்தையாகிறது இல்லையா;
கவிஞன் எதையாவது எழுதிவிட முடியுமா?
மனிதன் அந்தக் குழந்தைக்கு தந்தையாவானா
வார்த்தைகளின் வன்மம் இருக்கிறதே
குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்

தமிழில் : ஆனந்த செல்வி
-----------------------------------------------------------------

நூல் மதிப்புரை கடவுள்களின் கலக அரசியல்


கவிஞர் கோசின்ராவின் "என் கடவுளும் என்னைப் போல கறுப்பு' கவிதை நூலில் இரட்டையர் என்ற கவிதை அண்மையில் வாசித்தேன்.

சற்று உற்றுப்பார்த்தேன்
நிதானமாய்..
சாத்தானின் முதுகுப்பக்கம்
கடவுளின் முகம்
கடவுளின் முதுகுப்பக்கம்
சாத்தானின் முகம்

இவர்களை
தனித்தனியே பிரித்து
சாத்தானைக்
கொன்றுவிட வேண்டும்
அதுதான் பூமிக்கு நல்லது.

ஒருவேளை
அறுவைச் சிகிச்சை
தோல்வியடைந்தால்..?
கடவுள் இறந்து
சாத்தான் பிழைத்துவிட்டால்..
(பக் 93 )

அறுந்துப்போன பாவாடை நாடாவாக, தங்கை சாந்தியின் தூக்குமாட்டி கயிறாக இருக்கும் கயிறு கடவுளை உட்கார வைத்து தேரிழுக்கும்போது மரியாதைக்கு உரியதாகிவிடுகிறது என்ற கயிறு பற்றி எழுதும்போதும் கடவுள் வருகிறார்.. ஏன் சிறுவர்களின் கைகளில் ஊதப்பட்ட நிரோத்தைப் பார்க்கும்போது அதையும் கடவுளுடன் முடிச்சுப் போடுகிறது இவர் கவிதைகள்.

கடவுளின் தலங்களிலும்
நிரோத்
கிடக்கிறது
யார் எறிந்திருப்பார்கள்?

கடவுளின் குடும்பத்தில்
நேற்றுவரைக்கும்
புதுவரவு இல்லை

என்று கவலைப்படும் போது கடவுளின் குடும்பத்தைக் கட்டுப்படுத்துவது நிரோத் என்றால் இங்கே கடவுள் யார்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
மதமாற்றம் சிலரால் ஏன் மிகப்பெரிய குற்றமாக சித்தரிக்கப்படுகிறது என்பதையும் அதன் மூல காரணத்தையும் மதமாற்றம் என்ற கவிதையில் தெள்ளத்தெளிவாக எழுதுகிறார்

நம் கடவுள்கள்
யானைகளாகவும்
காளைகளாகவும்
பறவைகளாகவும்
வந்திருக்கின்றனர்
அவன் ஒரு சண்டாளனாக
ஒரு தலித்தாக ஏன்
பிறக்கவில்லையென்று
கேட்கிறீர்கள்?
நீங்கள் சிந்திக்கிறீர்கள்
அது உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிடும்.
மதம் மாறாதீர்கள்
உங்களையே நீங்கள்
சிலுவைக்குள் அறைந்து
கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு நீங்களே
குல்லாய் மாட்டி விடாதீர்கள்

நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது? (பக் 54 )

இப்படியாக கடவுள்களைப் பற்றிய பல்வேறு தளங்களில் விடைகாணமுடியாத வெளியில் நின்று கொண்டு மனிதம், மனித நேயத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி தன்கவிதைகளில் பயணிக்கிறார் கோசின்ரா. இவருடைய கடவுள் பாதையில் போப்பாண்டவரும் தப்பவில்லை.

கடவுள்கள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புடைய மறுபிறப்பு,சொர்க்கம், நகரம் எல்லாம் கோசின்ராவின் பார்வையில் கவிதைக்கான தளமாக விரிகிறது. இக்கவிதை தொகுப்பின் தலைப்பு கவிதையான என்னுடைய கடவுள் கவிதையில் சில கருத்தியல் முரண்கள் வாசிக்கும் அனைவருக்கும் ஒரு கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்கவிதையின் முதல்வரியில் சொல்லுகிறார்...

என்னுடைய கடவுளும்
கறுப்புத்தான்
தமிழ்தான் தாய்மொழி..

இனி தமிழனின் கறுப்புநிறக்கடவுளை அறிமுகப்படுத்தும்போது கடவுளுக்கு கோவில்தான் உலகம் என்கிறார், வெளிச்சத்தின் கைகள் தீண்டாத அறையில், தவறி விழுந்த பல்லிகள் பயமுறுத்த போலியோ கால்களுடன் தமிழனைப் போலவே நோஞ்சானாய் இருப்பதாக சித்தரிக்கிறார்.

தமிழின வரலாற்றில் கறுப்பு கடவுள் கோப ஆவேசத்துடன், மேற்கூரையும் இல்லாத வெட்டவெளியில் கையில் அரிவாள், வேல் ஆயுதங்களுடன் முறுக்கிய மீசையுடன் திடகாத்திரமான தோள்களுடன் கண்டவருக்கு அச்சம் தரும் தோற்றத்தில் காட்சி அளிப்பவராகவே இருக்க கவிஞர் சித்தரிக்கும் நோஞ்சான் கடவுளின் சித்தரிப்பு கவிதைக்கான கருப்பொருளை வலுவிழக்கச் செய்துவிடுகிறது.

கலைஇலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது போல இக்கவிதைகளின் மூலம் கவிஞர் கோசின்ரா "ஒரு கலக அரசியலைச் சாதிக்கிறார்'.

புதியமாதவி

என் கடவுள் என்னைப்போல் கறுப்பு
கோசின்ரா
குமரன் பதிப்பகம், சென்னை 17.
பக் : 96, விலை : ரூ 50/



-------------------------------------------------------------------


நூல் மதிப்புரை மலை ஒரு பார்வை

கவிதைத் தடத்தில் ஒரு புதிய தளத்தில், ஒரு புதிய மொழியில் இயங்குபவரே இலக்கியத்தின் ஆளுமையாக கருதப்படுகின்றன். கவிதைக்கு சாயல் இருக்கலாம். கவிஞருக்கு சாயல் கூடாது.
""முற்றிய முதுமையில்
முதிர்ந்த மரத்தில் எங்கெங்கும்
உறவு கொண்டோடும்
எனக்கான கவிதை மொழி''
என சாயல் அற்று சிலரே கவிதைப் பிரவேசம் செய்து வருகின்ற சிலரில் ஆர். ரத்தினசாமி ஒருவர். இரண்டாம் படைப்பாக அவரின் தொகுப்பு "மலை'.
முன்னுரை மலை குறித்தானாலும் தொகுப்பில் மலை பற்றியவை இல்லை.
""ஒரு பறவை
தனியே பறப்பது போல
நீண்டு போய்க் கொண்டுள்ளது
அந்த மலைப்பாதை'' என ஒரேயொரு சிறுகவிதை.
அப்பாவின் ஆளுமை கவிஞரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை அப்பா பற்றியதானவை உறுதிப்படுத்துகின்றன் முதிர்வுமுலம் மரியாதையை வெளிப்படுத்துகிறார்.
அப்பா அளவிற்கு அம்மா புகழும் கவிஞர் பாடியுள்ளார். வீடெல்லாம் புகழ் மணக்கும் மூலம் அம்மாவின் நேர்மையை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
""யாவும் நினைவில் நெருக்கமாய்
உள்ளது போலவே
அம்மாவின் அந்த கடைசிப் பெருமூச்சும்
சாகாது உள்ளது''
என "இருப்பு' பெருமூச்சு விடச் செய்கிறது. வீடும் ஒரு பாடு பொருளாக பாடப்பட்டுள்ளது. பெற்றோரைத் தொடர்ந்து மகள் குறித்தும் கவிதைப் பாடி உள்ளார்.
""உன் வார்த்தைகள் யாவும்
எழுதப்படுமுன் பேசப்படுமுன்
கழுவப்பட வேண்டும்
நெஞ்சம் நேர்மையைச் சுரக்க வேண்டும்''
என அறிவுரைத்துள்ளார். மகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக உள்ளது இக்கவிதை.
கந்தா...யீ என்னும் கவிதை ஒர் ஆசிரியர் என்னும் நிலையில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதையாகும். ஒரு மாணவன் சீரழியக்கூடாது என்னும் ஆசிரியரின் நற்குணம் பாராட்டுக்குரியது. ஒரு கவிஞரை விட ஒர் ஆசிரியரையே இக்கவிதை மூலம்அறியமுடிகிறது "வானம் என் கண்கள்' மூலம் ஒரு கவிஞராக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

நகரத்தின் குரல் எத்தனையோ இருந்தாலும் கிராமத்துக் குரல்கள் காண்பதரிது. "காணக் கிடைக்காத குரல்கள்' மூலம் பல குரல்களை வாசகருக்கு அடையாளப் படுத்துகிறார்.
""எப்படித்தான் வார்த்தைகள்
இவர்களுக்குகெல்லாம் இயல்பாய்க் கிடைக்கிறதோ
வாய் திறந்தால் வார்த்தை ஜாலந்தான்'' என கிராமத்தவர் மொழி கொண்டு பிரமிக்கிறார்.

மனிதர்க்கு பயம் ஏற்படுவது இயல்பு கவிஞரும் சில பயங்களை கவிதை மூலம் பட்டியலிட்டுள்ளார் :

""குரூப் ரீடிங்களுக்குப் போய் வருகிறேன்
மகள் தினமும் சொல்லிப் போகையில்
லவ் இருக்கலாமோ? என பயங்கொள்வது அர்த்தமற்றது சராசரியானது ஆயினும் "தீமைகளைத் தொலைந்திடும்' நாள் மூலம் பெண்ணியம் பேசியுள்ளார் பெண்களுக்காக நேரடியாகவே குரல் கொடுத்துள்ளார்.

ஊரில் பலர் இருந்தாலும் ஒரு சிலரே மனதளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துவர் அவ்வாறு கவிஞரை பாதித்தவர் சிக்கணப்ப கவுடர். கவுடர் என்பவர் மலையில் வாழ்வபர். வெறும் உருவமாய் என்னுள் பதிந்தவரில்லை என கவுடர் குறித்த பதிவுடன் தொடர்கிறது கவிதை.

தொகுப்பு நெடுக கவிஞர் சந்தித்த மனிதர்களைக் காண முடிகிறது. உறவுகளை குறித்து பேசும் போது உணர்வுகள் கூடுதலாகவே வெளிப்படுத்தபட்டுள்ளது. ஓர் எதார்த்தமான கவிஞராக தொகுப்பின் வழி அறியப்பட்டாலும் சமூக அக்கறையுள்ளவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிச் செய்துள்ளார் என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன

இயல்பாகவே ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இது கவிஞரின் குற்றமாகக் கூற முடியாது இன்று மக்களின் போக்கே அவ்வாறுதான் உள்ளது. மலை மக்களின் பண்புகள், குணங்களை எடுத்துக்காட்டியதற்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் மலை குறித்தும் மலை மக்கள் பற்றியும் எழுத கவிஞருக்கு ஏராளமான வாய்ப்புண்டு அடுத்தத் தொகுப்பில் அவைகளை எதிர்பார்க்க வைக்கிறது மலை.

பொன்.குமார்
மலை
ஆர். ரத்தினசாமி
வெளியீடுதேவி பதிப்பகம்
விலைரு40.00/
பாரதியைக் காத்த களமே
பாரதிதாசனால் புகழடைந்த ஊரே
சங்கரதாசு சுவாமிகள் வாழ்ந்த மண்ணே
தமிழ் ஒளி, புதுவைச்சிவம்,
வாணிதாசனை ஈன்ற தாயகமே
அரவிந்தரை மாற்றிய புண்ணிய பூமியே

ஓலைச் சுவடிகள்
பைரவி
வெளியீடு : வி. பிரகாஷ்
ஞி/ணி. ராஜன் புத்தக நிலையம்
46 தரைத்தளம், நகராட்சி வளாகம்,
ஜவஹர்லால் நேரு வீதி, புதுச்சேரி 1.

---------------------------------------------------------
ஐக்கூ....ஐக்கூ....ஐக்கூ....

பனையோலை நுங்கு


கொந்தளிக்கும் கடலிலும்
மையம் கொள்ளும்
புயல்

எண்ணெய் இல்லாவிடில்
திரியையே தின்னும்
விளக்கு

நன்கொடை எனும்போது
நம்பெயர் அதிலெதற்கு
விலாசமற்றது பூவின்தேன்

தேவைப்படுகிறது எதிர்முனைகள்
ஒளியின் பெருமையறிய
உதவுகிறது இருள்

நாணைவிட்டு வெளியேறி
தைக்கும் இடமறியாமல்
தருமாறும் அம்பு

ஒட்டுவது கடினம்
வேகவேறுபாடுள்ள
மாடுகள் பூட்டிய வண்டி

ஒதுங்கிக்கொள்ள
இடம் கொடுத்தேன்
உள் நுழைந்தாய் ஒட்டகமாய்

அதேகுரல் அதேமொழி
அலுக்காத உணவாய்
அன்பு

நிறமும் வடிவுமா நிர்ணயிருக்கும்
கருப்பாய் கணுக்களோடிருப்பினும்
இனிப்பாய் கரும்பு

நீ. ண். ட தொலைவிலிருந்தும்
நீந்தி வந்து கதவு தட்டும்
நினைவலைகள்

முரட்டுத்தனம் மோசமோ?
பனையோலைக்குள்
பத்திரமாய் நுங்கு

இரா தமிழரசி.

------------------------------------------------------

பாடலொன்றை இசைக்கிறேன்
பாடல் முழுவதும் பயணித்துப்
போகிறாய்...

நிறுத்திய பின்னும்
முடிவற்ற வார்த்தைகள்
உனது முகவரி
தேடுகின்றன...

எண்ணற்றப்ப
பாடல்களிலும்
எங்காவதொரு வரிகளில்
புகுந்து விடுகிறாய்

பாடாத போதிலும்
எங்கிருந்தோ
வளரும் பாடல்
உன்னை நினைவூட்டுகிறது!

பாரதிகிருஷ்ணன்


-----------------------------------------------------------
புதையல்
தொழில்
எழில் எடுத்த மலர்க்கமல ஏந்திழையாள் சன்னதிக்கு
தொழில் அடுத்து நல்ல கவி சொல்லணுமாம் அழல் அடுத்த
கண்ணுலதான் தன் மகனே! காய்சினத்து வேலுடையாய்!
வண்ணத் தமிழ் எனக்கு தா.

கந்தா, கடம்பா, கதிர்வேலா கட்டழகா
சந்தார் தடந்தோளா சட்டுணுவாஇந்தவூர்
ரேடியோக் காரரெனை நெருக்குகிறார் லேட் டாச்சாம்
ஒடியா, ஒடியா வா

வந்தாலும் போதாது வாகைபுனை வேலவனே
சொந்தமாய்க் கவியேதும் தோணுதிலைசெந்தமிழில்
பாட்டு ரெடிமேடாய்ப் பண்ணிவச்சால் கொண்டு வந்து
லேட்டேதும் பண்ணாமற் தா

கும்பிடுவார், குழைவார், கூத்தாடிப் பல்லிளிப்பார்,
வம்பிடுவார் பின்னால் வழக்கிடுவார்அம்புவியில்
அன்னார் தொழிலை அழகாகப் பண்ணிவச்சேன்
என்னமோ காணாமல் போச்சு.

காப்பியடித் திட்டேன் கயிறு திரித்து வச்சேன்
எப்படியோ பாட்டென் றெழுதினேன் அப்படியும்
வாகையடி முக்கிலது வந்து குடி போட்டதடா
தோகை மயில் ஏறி வா

நாலே வினாடி தான், நல்லதாய் ஒன்று சொலு
ஏலே முருகையா எத்தாதேவாலே
வந்து இருந்திங்கே வக்கணையாயப் பாட்டெழுது
தெந்தனங்கள் பண்ணாதே வா

துருப்பிடித்த வேலைத் தூர எறி இங்கே வா
உருப்படியாய்ப் பாட்டொன்று சொல்லு விருப்புடனே
கவியரங்கம் கூட்டிக் கன்னித் தமிழ் வளர்ப்பார்
செவிக்கமுதமாய் ஒன்று சொல்லு.

வேலன் உரைக்கின்றான் வேளுரா இன்னமு நீ
காலம் கலி என்றறியாயோ? ஆலம்
உண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்
அண்டி வந்து கேட்பவரார் சொல்?

பண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்
கண்ணைச் சொருகிச் கவி என்பார் அண்ணாந்து
கொட்டாவி விட்ட தெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

உழைப்புக்குப் பாட்டென்றேன் ஓங்கும் சினம் எடுத்து
பிழைப்புக்கே ஆபத்தாய்ப் பண்ணிவிட்டான் அழைத்த
நல்லவரே தமிழின் நயங்கள் வளர்ப்பவரே
கொல்லாதீர் என்னை விடும்.


---------------------------------------------

பயணம்


பயணம் எனில்
சிலவு தான்!

செலவு இல்லா
பயண மேது?

நேர செலவு
பொருட் செலவு

செல்லும் போது
சன்னலோரம்
இருக்கை தேடும்
திரும்புகையில்
நிற்க இடம்
கிடைக்குமா? என
ஏங்கும்

முந்நூறு செலவில்
பயணம் சென்று
திரும்பு கையில்
கிடைத்த
மூன்று கவிதையில்
திருப்தியுறும் மனம்.

சோலை. இசைக்குயில்

--------------------------------------------

ஆறுதல்


அப்பாவின் சம்பளம்
அவர் குடிக்கே இரையாகும்
அம்மாவின் கூலிதான்
அரைவயிற்றுப் பசியாற்றும்
இதற்கு நடுவே
எனது படிப்புக்கு
யாரை எதிர் பார்ப்பேன்?
ஆறாம் வகுப்பில் சேர
அண்ணனுக்காக காத்திருக்கேன்.

வெளியூரிலிருந்து அவன்
விடுப்பெடுத்து வரும் போது
வீட்டில் அடுப்பெரியும்
கொஞ்சம் பணமும்
நிறைய அன்பும் கொண்டுவருவான்
எனக்குப் பாவாடை சட்டையும் தான்

கண்ணீரைத் துடைத்தெறிந்து
கன்னத்தில் முத்த மிட்டுக்
கஷ்டத்தை நினையாதே
என்றொரு ஆறுதலும் தருபவனாய்

எப்போதும்
அவனிருப்பான்
படிக்கிற வயசில்
பட்டணத்து ஒட்டலில்
பாத்திரங்கள் தேய்த்துத்
தானும் தேய்வானே
அவனை அணைத்துக்கொண்டு
ஆறுதல் தருவார் யார்?

வடுவூர், சிவ.முரளி


----------------------------------------------

எங்கள் ஊர் சிவன் கோயில்

சுவரோரம்
சிறுநீர் கழிப்பதைத்
தடுக்க
தன் முயற்சியில்
சற்றும் மனம் தளராமல்
பதினெட்டாவது
தென்னங்கன்றை நடுகிறார்
தலையாரி சுப்ரமணி

சிதிலமடைந்த
மடப்பள்ளிக்குள்
பசித்த எறும்புகளும்
கொழுத்த எலிகளும்
குடியிருக்கின்றன

குதிரை வாகனத்தின்
குறியை அசைத்து
சிரிக்கும் சிறுவர்கள்

செவ்வரளிச் செடிகளின்
நிழல் மறைவில்
திருட்டுப் புகையூதும்
இளவட்டங்கள்

பாத்திரங்களில் விழுந்த
துளை அடைக்கும் பொருட்டு
சிலைகளின்
எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட
அபூர்வமாய் வரும் பெண்கள்

எதிர்க்கடையிலிருந்து
தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து
நந்திக்குப் பின்புறம்
வட்டமிட்டு சீட்டாடும்
ஆண்கள் என
எப்போதும்
ஆள் நடமாட்டமுள்ள
எங்கள் ஊர்
சிவன் கோயிலில்
இப்போதும்
மறக்க முடியாதது
என்னவெனில்...
பிரதோஷம் தோறும்
பிரசாதமாக
குருக்கள் தரும் சுண்டலை
எல்லோரும்
அங்கேயே தின்று முடித்து
கால் சட்டையில்
கை துடைத்துக் கொள்ள
மாப்பிள்ளை பென்ச்சு
முருகேசன் மட்டும்
பத்திரமாக வீட்டுக்கு
எடுத்துப் போவான்
அப்பா அருந்தும்
சாராயத்திற்கு
தொட்டுக் கொள்ளவென

லலிதானந்த்

-------------------------------------------------
அணிச் சேர்க்கை
அம்ருதா சென்னை
பெண்ணியம் சென்னை
சிறகு சென்னை
கிழக்கு வாசல் திருத்துறை பூண்டி
சௌந்திர சுகன் தஞ்சை
பொதிகை மின்னல் சென்னை
நாளை விடியும் திருச்சி

------------------------------------------

பித்து

உங்கள் யந்திர வாகனத்திற்கு
சவால் விடுவது போல சாலையின் குறுக்கே
எதிர்பாரா அவளின் கடப்பு
உங்கள் படபடப்பை கணிசமாய் கூட்டி
"சடன் பிரேக்'கிட வைக்கிறது
(இது போன்ற நிகழ்வுகளுக்குத்தானே அது இருக்கிறது)
டயரின் தேய்ந்த கிரீச்சிடல்...
திரும்புகிறாள் உங்கள் புறம்

அழுக்கேறிய கிழிந்த ஆடைகள்
அவளின் இளமையை காட்சி படுத்துகின்றன
சடைத்த கூந்தலுக்குள் தெற்றென புலப்படா முகம்
தீட் சண்யம் மிகுந்த பித்தேறிய
கண்களின் உக்கிரங்க கண்டு
வசைபொழிய தயாரான உங்கள்
வாயடைத்துப் போகிறது

கெஞ்சுகிற பாவனையுடன் நீளும் கையில்
பிரக்ஞையற்று நீங்கள் வைத்த சில்லறையுடன்
செல்கிறாள் குழந்தை சிரிப்புடன்
உன்மத்தம் கொண்ட விழிகளை
உங்களிடம் விட்டு விட்டு

சக்தி அருளானந்தம்

--------------------------------------------------

குறுங்கவிதைகள்
வனத்தினுள் நீளும்
ஒற்றையடிப் பாதையில்
தொலைந்து விடுவதாய் கனவு
விடியாமலிருந்தால் நல்லது

எல்லா வார்த்தைகளாலும்
பிடிபாடமல் நழுவுகிறது
அப்பூவின் வாசனை

அடுத்த அலையில்
காணாமல் போகும்
என் காலடித் தடம்

இந்த இடம்
இந்த ஒளி
இந்த நிகழ்வு
இந்த மௌனம்
இல்லையெனில்
இல்லை இக்கவிதை
பிறகேன் கீழே
என் பெயர் மட்டும்...

உதிர்ந்த இலைகள்
கிளைத்த கொழுந்துகள்
குறித்து குறிப்பேதுமில்லை
இப்பெருமரத்தில்...

பா. திருச்செந்தாழை


----------------------------------------------------------

தெரிகிறது
புல்வளர்ந்த இடம் மாட்டுக்கு
எங்கெங்கென்றாலும் உடன் பசியும்

தெரிகிறது
விரைவு வண்டியோட்டிக்கு
தண்டவாள மாடுகள்
தப்ப இயலாது என்ஜினிலிருந்து

தெரிகிறது
மேலும் விரைவு வண்டி
கட்டுப்படாது என
வண்டியுயிர்கள் காக்கப்பட

தெரிகிறது
மோதும் அக்கணம் கையிரண்டை
தூக்கி கண்களைத் தாழ்த்திக் கொள்ள

தெரிகிறது
பார்வையாளருக்கு கணத்தில்
அரைத்து, சிதறி, இறைத்து
தண்டவாளத்தின் நடுவிலும் அருகிலும்
சதைத் துண்டுகளும் பாகங்களும்

தெரிகிறது
இரைப்பையில் அசைபோடப்படாதபுல்
பசுமை, அரைத்த கூழ்,
மொத்தையாகவும் நாடாவாகவும்
கணிசமான அளவு கூழாகாத
பிளாஸ்டிக் பைகள்

தெரிகிறது
உடன் நடந்த ஒரு மாட்டுக்கு
ஏதோ சோகம்
கண்கள் வழிய கதற மட்டும்

தெரிகிறது
மற்றொன்றுக்கு வாயில் நுரைதள்ள
தண்டவாளத்தைப் பார்த்து
தலை ஆட்டி ஆட்டி
மிரண்ட கண்களுடன் ஏதோ சொல்ல

தெரிகிறது
கூட்டமாக வந்தடைந்த
காகங்களுக்கும், மேயும் நாய்களுக்கும்
சிதறுண்டு கிடக்கிறது இரை

தெரிகிறது
மாட்டுடையோனுக்கும்
பசு பால் கொடுக்கும்
காளை வண்டியிழுக்கும்
சதை சாப்பிட இயலும்

தெரிகிறது
எனக்கோ அடுத்தடுத்த
வண்டிகளுக்கு எது எதுவோ?
யார் யாரோ? என்று.
க்ருஷாங்கினி

----------------------------------------------------------------------------
நூல் மதிப்புரை தனிமை கவிந்த அறை நான்கு பார்வைகள்

1. மதிய வெயிலில் மௌனமாய் தலை கவிழ்ந்து கிடக்கிற ரோஜா நிற செம்பருத்திப் பூக்களைப் பார்க்கிறேன். காலையில் இதேப் பூக்கள் ஆரவாரமாய் மலர்ந்து சூரியனை வரவேற்றிருந்தது. இப்போது இதைப் பார்க்கும் போது மனதில் தோன்றும் பிரிவு தனிமை கவிந்த அறை தொகுப்பில் நம்முடன் பயணம் செய்கிறது. தலைப்புக்கு வஞ்சகம் செய்யாத கவிதைகள் புத்தகம் முழுவதும். காதலோ, நட்போ, பிரிவோ, பாசமோ, ஊடலோ, கூடலோ எந்த உணர்வையும் மலினப்படுத்தாத கவிதை மொழி தொகுப்பு முழுவது உள்ளது. மும்பை மழையின் தாண்டவநேரங்களை பல ஊடகங்கள் வழியாக ஒரு நிமிஷம் அடடா சொல்லி அடுத்த சேனல் பார்க்கப் போன கூட்டம் நம்முடையது. கவிஞர் இத்தொகுப்பில் தவிக்க தவிக்க பதிவு பண்ணியதை ஒரு கதம்பமலர் கொத்துகளாக மழைக் கொத்து தந்திருக்கிறார். மனசைப் பதைக்கச் செய்யும் மழை நேர மாலைப்பொழுதுகள் மாநகர மரணங்கள் தற்காலிக உறவுகளின் முகமூடி தரித்த புன்னகைகள் என நமக்கு ஆவணப்படம் பார்க்கிற உணர்வில் கவிதைகள்.

"சீதை ஜெயத்தில்' தெளிவது கவிஞரின் ஜெயமா? இல்லை காதலா என்று கேட்க தோன்றுகிறது. சொல்ல இயலாத பெரும் மௌனத்துக்குள் சிக்கித்தவிக்கிறது மனசு. கம்பி வழி கசிகிறது காதல். பண்படுத்தப்பட்ட சுகமான எழுத்து வார்த்தை தூண்டில்கள் மாட்டிக் கொள்ளாத மரபு மீன்கள் கவிதையாய் வெளியே சுற்றுகிறது. கவிஞரின் எழுதுகோல் நம்முடன் கை கோர்த்து தொகுப்பு முழுவதும் தனிமையை உணரும் இன்னொரு தனிமையாக.

இதுவரை வாழ்ந்திருந்த சொந்த ஊரின் பிடிமண் அற்றுப் போகிற ஏக்கம் கண்ணாடித் தொட்டிக்குள் மூழ்கிய ஆகாயத் தாமரை வேராய் வெறுத்துப் போன அலைச்சல் வாழ்வின் நிமித்தங்கள் மாநகரப் பிரவாகத்தின் வேகச் சுழலில் சிக்கிய நிமிடங்கள் கவிஞரின் ஆழ்மனசு தியானிப்பது மரபு கூறும் அக ஒழுங்குகளை உண்மை உணரும் மனசுக்கு நெருக்கமான பழகிய மொழிநடை. இது நடுமய்யச் சுழலின் வீர்யத்தில் சிக்கித் தவித்து பீரிடும் கவிதை தானா இல்லை இரவு முழுதும் விழித்திருக்கும் திசைவிளக்காய் தூரத்தில் சுற்றியலைகிற ஒளிக்கீற்றோ எப்படி இருப்பினும் இதமான அந்தி சூரியனின் மிச்சங்கள் மாலையை இனிதாக்குகின்றன குழப்பங்கள் ஏதுமற்று.
கீதாஞ்சலி பிரியதர்சினி 

2. "தனிமை கவிந்த அறை' நேற்று பயணத்திலேயே வாசித்து விட்டேன். நூல் தயாரிப்பும் சில கவிதைகளும் அபாரம். கவிதைகள் முழுக்க தனிமையும், தனிமையில் ததும்பும் காமமும் ஊடாடுகின்றன மும்பை வாழ்வின் தனிமைத் தாக்கம் என்பதை என்னால் உணர முடிகிறது.

கவிதை நூல் என எடுத்து படிப்பவருக்கு இது மட்டும் போதுமா என்கிற கேள்வியும் உடன் எழுகிறதே கவிதை மொழி பல இடங்களில் ரகிக்கும்படி உள்ளது. முந்தைய தொகுப்பை விட (நெருப்பில் காய்ச்சியப் பறை) இத் தொகுப்பை பாராட்டத்தக்க அம்சம் இதுவெனில், சமூகத் தாக்கமும், நிகழ்வுகளும் விடுபட்டுப் போயுள்ளது சரியெனப் படவில்லை. யாரின் விருப்பத்திற்காகவும் நாம் தொகுப்பு வெளியிடுவதில்லை என்ற போதிலும், நமது விருப்பம் சார்ந்து சமூக அக்கறை சார்ந்ததுமான படைப்புகளை முன்னிலைப் படுத்துவதில் நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம் தானே... சமீபத்தில் வாசித்த சில கவிதை நூல்களும் உணர்வு தளத்திலேயே இயங்குகின்றன. வாசித்த நமக்கு வெறும் அயர்ச்சியை மட்டுமே தருவதாய் உள்ளன. இந்நூல் அப்படி அல்ல ஆயினும், இன்னும் செறிவாய் தர முயன்றிருக்காலம்.


மு. முருகேஷ் 

3. அடக்கம் செய்யப்பட்ட பிரேதத்தின் மண்மேட்டிலிருந்து கவிந்து எழும் மலர்களின் வீச்சத்தைப்போல இனம்புரியாத ஓர் உணர்வு ஆட் கொண்டது .

தவிர்த்திடும் எண்ணத்திலேதான் ஆங்காங்கே காதலெனும் மின்மினிகளை பதித்து வைத்திருக்கிறீர்கள் போல அவை கொடுக்கின்ற அளவான வெளிச்சத்திலே தனிமை கவிந்த அறை அற்புதமாய் ஜொலிக்கிறது.

தொகுப்பின் பிரதான நோக்கத்தைப் போலவே கவிதை வடிவமைப்பிலே மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகள் ஈர்க்கின்றன. புதுமைக்கே உரித்தான சிற்சில பலகீனங்கள் ஆங்காங்கே ஊடாடி நின்றாலும் அவையாவும் புதுமையின் அழகையும், கம்பீரத்தையும் அணிசேர்த்திடவே பயன்பட்டிருக்கின்றன.

1. காதலியைத் தடுக்கின்ற தடைகளை காதலன் தாண்ட வேண்டியதன் அவசியம் என்ன?
2. மௌனம் என்பதே ஒரு ரகசியமில்லையா?
3. விடுதலையை சமையலறைச் சாடிக்குள் ஒளிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
4. காம தகனத்துக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் கழுவேற்றம் அவசியந்தானா?
போன்ற இன்னுஞ்சில கேள்விகள் தங்களின் கூர்மையின்பாலும், தைரியத்தின்பாலும் (வார்த்தை சரியில்லாமல்) சிற்சில சலன அலைகளை ஏற்படுத்தினாலும், தொகுப்பெங்கும் விரவிக்கிடக்கின்ற தனிமை எனும் ஆழ் அமைதி அவற்றை கரை தொட அனுமதிப்பதில்லை.

சில கவிதைகளுக்கு வாய்த்திருக்கும் நேரடித் தொனி மிகுந்த வருத்தமடையச் செய்திருக்கிறது. மெல்லிய மேகம் அப்பிய மலைச் சிகரத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி எரிவதுபோல அத்தகைய கவிதைகள் மொத்த அமைதிக்கும் கொள்ளிமூட்டிடுமோ என்னும் அச்சம் தான் அந்த வருத்தத்துக்கு காரணம்.

தமிழ் கவியுலகம் தங்களைப் போன்ற புலம்பெய்ந்து வாழ்வோரிடம் உள்ளடக்கரீதியிலே வித்தியாசமான கவிதைகளை எதிர்பார்த்துப் கொண்டிருக்கும் தருணத்தில் காமக் கடும்புனலில் திளைக்கும் அனேக கவிகளின் தவறுக்கு தாங்களும் ஆட்பட்டிட வேண்டாம் என்பதென் ஆழ் விருப்பு.

வாசித்து முடித்ததும் மெல்லியக்குரலில் ஒலித்திடும் இனம்புரியா கீதமொன்றினை என் செவி விட்டு அகற்றிட அனேக நேரம் பிடித்தது.
சி. பாவெல் 

4. அன்பாதவன் கவிதைகள் ஆழ்மனப்படிமங்கள். கண்ணாடி குடுவையில் பாதி அளவு நீர் நிறைக்கப்பட்டு அதில் ஒரு துண்டு பனிக்கட்டியை மிதக்கவிட்டால் அதன் அடிப்பகுதி நீரில் மறைந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் தான் தெரியும் உளவியலில் இதனை ஆழ்மனப்பதிவுகள் என்பர். இந்த ஆழ்மனப்பதிவு தான் தனிமை கவிந்த அறையாக வெளிப்பட்டிருக்கிறது கவிதையை உணர்ச்சியின் திருப்பு மையம் என்று சொல்லி விட முடியாது. அதற்காக உணர்ச்சியே கவிதை என்றும் கூறிட முடியாது கவிதை வீரியமுள்ள விதை அது மண்ணை கிளரும், அப்படியே உள்ளத்தையும் நையப்புடைக்கும். அன்பாதவனின் படைப்பாளுமை இருள் கிழித்து முளைவிடும் விடியலை போன்றது மழையின் நனைதலில் சிலிர்த்திடும் உணர்வு சார்ந்தது நூலில் கவிதையாகி இருக்கும் காமம் காக்கையின் கூர் அழகானது. தனிமையோடு கை குலுக்கும் வனவாசிகளுக்கு ஜீவ முடிச்சு. தனிமையின் மௌனம் மொழியாகியிருக்கிறது. தமிழ் சமூகங்களில் தனி மனித வாழ்வியல் சார்ந்த படைப்புகளின் அழகியல் கூறுகளில் காமம் மீவியல் தன்மை கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்தலின் அடிப்படையான இணைவும் ஙீ பிரிவும், காதல் ஙீ போர் என்ற கருத்தாக்கமாக விரிகிறது. எந்த ஒரு படைப்பும் உணர்வுக் களத்தின் உக்கிரத்தில் பிறப்பது தான். நேரிடையாக உணர்த்த முடியாத போது படைப்பாக மாற்றுவது சாத்தியமாகிறது. தீராக் காதலும் காமமும் கவிதையாக மாறும் போது நாய் குதறுவது போல படைப்பாளியை (ஆண்/பெண்) தாக்குவது கண்களில் காமலென்ஸ் பொருத்திப் பார்க்கும் காமுகனின் பார்வையாகும். அது அன்பாதவன் கவிதைகளில் நிகழக் கூடும். ஆனால் அப்படியான காமப்பதிவுகள் தனிமை கவிந்த அறையில் இல்லை.
மழைக்கும் உனக்குமான உறவில்
என்னையும் கை சேர்த்துகொள்ளும்
உன்னிலிருந்து பொங்கி / என்னுள் இறங்கிப் பரவி
நனைதலின் சுகமும் / இப்போது இனிக்கின்ற
இன்ப மழை / தவிப்போடும் தகிப்போடும்
அவஸ்த்திக்கும் என் தனிமை / புரியாமல் பொழிகிறது குளிர் மழை.

இப்படியான நுண் உணர்வுகள் பல கவிதைகளில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசிக்கப்பட்ட மிக அருமையான ஒரு கவிதை நூல் தனி மனிதரின் தனிமையை இணைக்கும் பாலம் இந்நூல் மனிதரின் மனதை வாசிக்க தெரிந்திருக்கிறது அன்பாதவனுக்கு.

முனைவர் அரங்க. மல்லிகா. 

தனிமை கவிந்த அறை
அன்பாதவன்
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை 11.


-----------------------------------------------------------
ஹைக்கூ அல்லாத ஹைக்கூ

பெருத்த ஆலமரம்
காற்று உலுக்க
உதிரும் குருவிகளின் சப்தம்

கொடியில் உலரும் துணிகள்
ருசி பார்க்கும்
சூரியன்

கரும்பு சக்கையாய்
பிழிந் தெடுக்கும் வாழ்க்கை
விடியலைத்தேடி தாசிகள்

அகதிகளை சுமந்த படகு
சிதறிக் கிடக்கின்றன
கண்ணீர் துளிகள்

எரியும் குடிசைகள்
விரைந்திடும் தீயனைப்பான்
குளிர்காயும் அரசியல்

கன்னிக்கோயில் ராஜா
---------------------------------------------------------------

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
இன்னுமிருக்கும்
எச்சவெளிச்சங்கள்
இருள் விரட்டி தோற்க
மீண்டும் மொரு முறை
மீட்டெடுக்கும்
முயற்சியாய்
இருள் சூழ் உலகு!

மகேசன்


---------------------------------------------------
குப்பை மலையில்
கோழிகள் உற்சாகமாய்
மேய்ந்து கொண்டிருக்கும்

அன்னப் பறவைகள்
ஆர்ப்பாட்டமாய்
நீச்சல் தொடரும்

குளத்து மீன்கள்
துள்ளிக் குதித்து
வானம் பார்க்கும்

கடற்கரையில் எடுக்கும்
சுதந்திரமாய்
ஓட்டப்பயிற்சி

கூடுகட்டிய குருவிகள்
குடித்தனமிருக்கும்

மௌனமாய் நத்தைகள்
பாதயாத்திரை
சென்று கொண்டிருக்கும்

இவைகளுக்கும்,
நகர்கின்றது நாட்கள்
நலமாய்
மனித தலையிடுயில்லாமல்

எஸ். விஜயன்
-------------------------------------------------------------------------

இணைய இதழ் அறிமுகம்3
பதிவுகள். காம்
மெல்ல இனி தமிழ் சாகும் என்று ஆங்காங்கே சில பஞ்சுத் தலையர்கள் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னைக்கு ஒப்பிடுகையில் தற்போது தமிழ் இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து
உள்ளது. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். தமிழகம் தாண்டி. இந்தியா தாண்டிருப்பவர்கள் அச்சிட்ட இதழ்களை பெற்றுக் கொள்ள இதழ்லையோடு அஞ்சல் விலை பன்மடங்காகிப் போய் விடும் நிலையில் இணையத்தை போல் சவுகரியமான ஒர் ஊடகம் வேறு ஏதுமில்லை என்பது சுத்தமான உண்மை.வலைத் தளங்களும், வலைப் பதிவுகளும் நாளுக்கு நாள் றுக்கமாகிப் கொண்டிருக்கிறது.அச்சில் வெளிவரும் முன்னணி இதழ்களும் இணையத்திலும் தங்கள் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. இணையம் புகுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த ஒரு
மின்னிதழாக "பதிவுகள்' தளத்தை குறிப்பிடலாம். மாத இதழென்ற அறிவிப்போடு அவ்வாறே புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆவார். அரசியல் கவிதை, சிறுதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம், ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தக கையேடு, இலவசவரிவிளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி என பல அடுக்குகளை கொண்டு கனத்துக் கிடக்கிறது இந்தத் தளம்.
உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ளழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்றுகிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை தக்க ஒவியங்கள்/புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின்
ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்கு புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளை பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயம் படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கிய மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப் படுகிறது. நல்ல
திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத் தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்த தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்த தளத்தை திறக்கலாம் தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவர்கள் உடனடியாக இந்த இணைய இதழை காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது. பாராட்டலாம் பார்த்து ருசிக்கலாம்.

இணைய முகவரி
www.pathivugal.com
மின்னஞ்சல் : editor@pathivugal.com
----------------------------------------------------------------------------

நூல் மதிப்புரை மொழியின் சுழலில் நீந்தித் திளைக்கும் கவிதைகள்

உலகமயம் என்கிற ஒற்றைச் சொல் இன்று எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது. எந்தக் கிராமத்துக்குள் நுழைந்தாலும் குடிக்க குளிர்ந்த நீர்தந்த கிராமத்து வெள்ளந்திகள் இன்று வரவேற்பைக் கோலாவில் வழங்குகிறார்கள். மனிதர்கள் சாஷே வாக சுருங்கி விட கிராமம் சிறுநகரம், நகரம், மாநகரம் என மனிதரின் உறைவிடங்கள் யாவுமே தனது சுயமுகத்தினை தொலைத்து விட்டு விளம்பர பெரும் பலகைகளைத் தமது முகங்களாக்கி கொண்டிருக்கின்றன. தோளில் தொட்டழைக்கும் ஏதாவது ஒரு குரலும் நம்மை நிறுத்தி "இதை வாங்கு' "அதை உபயோகி' என வற்புறுத்தும் குரலாகவே இருக்கையில் மாறும் மதிப்பீடுகளை தொலைந்து போன விழுமியங்களை எண்ணி மருகுபவனின் மனம் என்ன பாடுபடும்? அம்மனிதன் படைப்பாளியாக குறிப்பாக உணர்வின் கொநிலையில் கவி படைக்கும் கவிஞனாக இருந்து விட்டால். இலக்குமி குமாரன் ஞான திரவியம் தந்திருக்கும் கவிதைத் தொகுப்பான
"வீட்டிற்கு கிழிருக்கும் கங்கு' பதிலாகிறது.

கவிஞனாக வாழ்வதற்கு மிக அதிகமான விலையைத் தர வேண்டியுள்ளது என விசனப்படும் ஞான திரவியம் தனியார் கல்லூரி யொன்றில் துணை முதல்வர். இது காரும் இரண்டு கவித் தொகுப்புகளை தந்துள்ளவர் முழுக்க முழுக்க கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்குபவரின் மூன்றாம் தொகுப்பு இது. ஞானதிரவியம் "பழமலய்த் தடத்தில்' கவிப் பயணம் மேற்க்கொள்பவர் சுயத்தை இழந்து பரிதவிக்கும் கிராமத்து ஆத்மாவை வார்த்தைகளால் படம்பிடிப்பவர்.
"அறை யெனப் படுவதோர்
ஆடம்பரமென்றிருந்த காலமொன்றில்
வைக்கோற் போர் மறைவிலே தான்
கருவானோம் '
என வேளாண்குடிகளின் வாழ்க்கையை இயல்பாக எவ்வித மனக் கிலேசமுமின்றி கவிதையில் பதிபவர்
கிராமிய விழுமியங்களில் சொந்த நிலமும் வீடும் ஒன்று இரண்டையும் இழக்கிற விவசாயி படுகிற வேதனை சொல்லில் வடிக்க முடியாது மல்லிகை வாசம் வீசும் வீட்டை இழந்தவனின் சோகத்தை காட்சிகளால் கவிஞன் காண்பிக்கையில் வாசிப்பவனுக்கும்
வந்து விடுகிறது இழப்பின் வலி:
"எல்லாம் மூழ்கிய போது
மிதந்த உங்கள் உணர்ச்சிகளற்ற
உடலின் நெஞ்சுக் கறியில்
ஒட்டியிருக்கிறதிந்த வீடு
கண்முன்னே பறிபட்டுப் போன போது
இப்போது சுற்றுச் சுவர்களுக்கும்
மூலையில் நின்று பார்த்தீர்களல்லவா
அந்தப்பார்வை'
"மனம்பருபனையின் கிழங்கு பிளந்தன்ன இனியார்க்குப் புரியும்' என்ற இறுதிக் கேள்விகளோடு ஞானதிரவியம் காட்டும் பனைச் சுவை இந்தத் தலைமுறை அறிய வாய்ப்பேயில்லை பதனீரைப் போன்றதொரு பானமில்லை
பதனீர்ப் பொங்கல் போல்
பொங்கல் இனியில்லை
நுங்குத் தண்ணீர் சுவைத்தறியாமல்
அமுதம் பற்றி அவன்
எழுதியிருக்கவே முடியாது
கழுகிடம் அலகாயிருக்கும் பணியில் சேர நேர்வதும் அசைவற்றுக் கிடக்கும் நிணம் கொத்துவதென்றால் கூட சமாதானமாகி விடும் மனநிலையும் வயிற்றுப்பாட்டின் வாழ்வு முரண்களின்றி வேறென்ன. காலந் தோறும் கவிதையோ பருவம் தோறும் மாறும் பெண் நிலைகுறித்து பரிவோடு பதிவு செய்கிறது.

கிராமியக் குடிசாமிகள் உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை மட்டுமல்ல அவர்களுக்கு மனத்துணை, கூடவே ஆற்றுப்படுத்தும் மையங்கள் கிராமப்பக்தியின் பன்முகப் பதிவினைக் காட்டும் "ஊன்று' ஒரு குறும்படம் பெருகிவரும் நுகர்வு பண்பாட்டினைக் குறித்து மிக எளிய மொழியில் சொல்கிறது ஞான திரவியத்தின் ஒரு காட்சி:
மடியப் புடிச்சு வித்துப்புட்டு
குடுமியப் புடிச்சு வசூல் பண்ணும்
தந்திர யுத்தங்களால்
வீடு முழுதும் வந்து ஒட்டிக்கொள்கின்றன
பல்லி மலத்தைப் போல
வாழ்வதற்குத் தேவையற்ற ஆக்கிரமிப்புகள்.
""செங்கண்மாலும் விடியக்காலை கனவும்'' கவிதையில் குரூரயதார்த்தம் குச்tடிணூஞு ஆக வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஞான திரவியத்தின் குறுங்கவிதைகள்.
"மொழி பெயர்த்ததில்லை
உலகில் எம்மொழியும்
விழியை'
"மலை விளிம்புகள் ஆபத்தானவை
உச்சியிலிருந்து
மகிழ்ச்சி
தொட்டியில் தங்கும் நீரில்
காலைப் பனிக்குள்
சிலிர் முள் முளைத்து விடுகிறது.

கவிதைகளோடு அழகியலும் கலந்து புதிய பொருள்களை வாசகருக்கு ஊட்டிவிடும் வரிகளின் சில அடையாளங்கள் இவை. கிராமத்து மரபுகளையும் பண்டாட்டையும் தன்னுள் வைத்திருக்கும் மொழி கவிதைக்கு தனித்துவத்தைக் கொடுக்கிறது. இதில் வட்டார அடையாளம் அடங்கியிருக்கிறது உலகத் தரத்திற்கான கவிதை யென்பது இந்து வட்டார பழக்கிலிருந்தும் வட்டார மனோபாவத்திலிருந்துமே உருவாவது என்று குறிப்பிடும் கரிகாலனது மதிப்பீடு ஞான திரவியம் படைப்புகளுக்கு மிகக் சரியாய்ப் பொருந்தக் கூடியது.

மாறுவதொன்றே மாறாதது என்கிறது சமூக விஞ்ஞானம் அத்தகைய மாற்றங்களில் நல்ல அம்சங்களே இல்லையா இழப்புகளை மட்டுமே எண்ணி அவஸ்திக்கும் படைப்பாளிகள் நவீன வாழ்வின் நல்ல அம்சங்களை குறிப்படுவதில்லை ஏனோ? ஞானதிரவியமும் இதற்கு விதி விலக்கல்ல மிகச் சிறப்பாக மொழியில் பல கவிதைகளை காட்சிப்படுத்த படிமங்களால் படிப்பவர்க்கு தரும் ஞான திரவியம் சில நேரங்களில் நவீனம் என்கிற மாயச் சுழலில் சிக்கிக் கொண்டு வாசிப்பவனையும் அதன் அடி அழத்துக்குள் இழுத்துவிடுகிறார்
கால காலமாய்
காலம் இருப்பது போல்
கால காலமாய் காலமில்லை.
காலம் மேய்வதாய்
கற்பிதம் உருவாக்கும் காலம்
கால காலமாய்.

எத்தனைக் காலம் இவற்றையெல்லாம் நவீனக்கவிதையென நம்புவது? பொருள் வயின் பிரிவை நாடும் கிராமப்புறங்களின் ஆற்றாமையாக ஒலிக்கிறது ஞான திரவியத்தின் கவிதைக்குரல் மனித இருப்போடு பின்னிக் கிடக்கும் பிற உயிரிகளின் அசைவுகளையும் உள்ளுணர்வுகளையும் தொட்டுத் திரும்புகின்றவையாக இருக்கின்றன இவரது கவிதைகள் நள்ளிரவில் சலனமற்று கிடக்கும் சிற்வுரின் ஆன்மாவைப் போன்று அமைதியும், ஆற்றலும், அழகும் கூடிய ஞானதிரவியத்தின் படைப்புகள் என மதிப்பிடும் கரிகாலனின் (நவீனத் தமிழ்க்கவிதையில் போக்குகள் பக்கம் 38) மதிப்பீடுகளையும் தாண்டும் வீட்டிற்கும் கீழிருக்கும் கங்கு வாசிப்பவர் மனதில் வனத்தீயாய் எரியும்.

அன்பாதவன்

வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு
கவிதைகள்
இலக்குமிகுமாரன் ஞான திரவியம்
அகரம் வெளியீடு



நூல் மதிப்புரை காதலின் பன்முக தரிசனம்

பொதுவாக காதல் கவிதைகள் எனில் ஆண்களை மையமாகக் கொண்டே எழுதப்படுவது தான் இதுகாறும் வரலாறு.
ஆனால் இது வரலாறுகளை புரட்டிப்போடும் நூற்றாண்டு. இதுவரையில் மூலையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த தலித், பெண்கள் ஆகிய நிராகரிக்கப்பட்டவர்களின் குரல்கள் ஒளிக்கும் காலமிது.
தமிழில் பெண் படைப்பாளிகள் பெருகி வரும் சூழலில் புலம் பெயர்ந்த கவிஞரான நளாயினி காதலின் பன்முக தரிசனம் காட்டும் கவிதைகளைத் தொடுத்து நங்கூரம் எனும் நூலாக்கி தந்துள்ளார்.
""நங்கூரம் கவிதைத் தொகுதி பலவகையான காதலைச் சொல்லிச் செல்கிறது எழுத்துலக சித்தாந்தங்கள் எல்லாம், காதல் மொழிகள் ஆண்களுக்கே உரியதாக அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக அதனை மாற்றும் பயனாகவே எனது காதல் கவிதைகள் ஆரம்பமானது எனலாம் என முன்னுரையில் தனது கவிதைகளின் ஊற்றுக் கண்களை பதிவு செய்யும் நளாயினியின் கவிதைகள் யாவும் மெல்லிய மொழியில் பேசுகின்றன.
ஒவ்வொரு கவிதையும் காதலின் வேறு வேறு பிரச்சனைகளை விவாதிக்கினறன. தனிமைத் துயரம் முதல் தற்கொலை முடிவு, இனப்பிரச்சனை பிரிவின் வேதனை என்கிற பாலின ஈர்ப்பு என பல்வேறுத் தளங்களில் நங்கூரமிடுகின்றன நளாயினியின் கவிதைகள்.
அழகிய சொல்லாட்சியும் வர்ணனைகளும் வாசிப்பவரை உற்சாகங் கொள்ளச் செய்யும்.
காதலுக்கான புதிய வரையறைகளை பதிவு செய்கின்றன இந்த வரிகள்:
""காதல் என்றால்
என்னவென்று தெரியுமா
உனக்கு ?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்
""காதல் போயின் சாதல்'' என்பது பழைய வரலாறு.
""காதல் போயினும் வாழ்தல்'' என்பது புதிய வாழ்வு முறை. "இவர்கள் யார் தடுக்க' கவிதை இதைத்தான் பதிவு செய்கிறது. சமூக எதிர்ப்பு கண்டு தற்கொலைக்குத் தூண்டு காதலனுக்கு மன தைரியமூட்டி வாழச் சொல்கிறாள் ஒரு காதலி
""இந்த இயற்கை எல்லாம்
நம்மை வாழ்ச் சொல்லும் போது
இவர்கள் யார் தடுக்க''
நூல் முழுக்க பெண் மையப் பார்வையில் புல்யைப் பட்டிருப்பதில் காதல் குறித்த கவிதை வெளிப்பாடுகளில் புதிய சிந்தனைகள் விரவிக் கிடக்கினறன.
காதல் எப்போது அரும்பும் ? யாருக்கு தெரியும் அது ஒரு மாயச்சூழல்
""நீகுளித்து விட்டு
தலைமுடியை உதறிய
நீர்த்துளியில் பூத்ததுதான்
உன் மீதானக் காதல்''
"என்னைக் கைது செய்யப் போகிறாய்' கவிதையாயில்லாமல் ஒரு பாடலாய் மலர்ந்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
வேறு வேறு பருவங்களின் காதலின் உணர்வுகள் காட்டும் புதிய அனுபவங்களை மிக அருமையாக பதிவு செய்திருக்கும் இந்நூலில் சில குறைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
பக்கம் 16ல் வெளியாகி உள்ள "காத்திருப்புகள்' கவிதை பக்கம் 30ல் "இன்ப வலியாக' வெளியாகி உள்ளது.
அதே போல் பக் 29ல் "பூஜிக்கத் தொடங்கி விட்டேன்' கவிதை மீண்டும் பக் 63ல் "உதடுகளுக்கு காதல் கடிதம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.
தரமான படைப்புகளுக்கு உத்தரவாதம் கூறும் உயிர்மையின் தயாரிப்பு தானா இது...?
சில கவிதைகளில் வசன நெடி வீசினாலும் ஈழப் போராட்ட பின்னணியில் எழுதப்பட்ட "தேதி ஒன்று குறிங்கையா' மற்றும் "காத்திருப்போம்' கவிதைகள் ஈழத் தமிழில் எழுதப்பட்டுள்ளது நலம்.
கவிதையும் வாசிப்ப வரை ஈர்ப்பவை. படிப்பவர் மனதில் நங்கூரம் பாய்ச்சி நிற்குமிந்த "நங்கூரம்'.

அன்பாதவன்

நங்கூரம்
கவிதைகள்
நளாயினி தாமரைச் செல்வன்
வெளியீடு : இமேஜ் இம்ப்ரெஷன்
11/29 சுப்ரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை 18.
விலை ரூ. 40/

------------------------------------------------

பிரியாணி பொட்டலத்துக்கு
படுத்துக் கொள்கிறாள்
ஒருத்தி

பெருஞ் செல்வத்தை விட்டு
நொண்டிப் பயலோடு
ஒடிப் போகிறாள்
ஒருத்தி

ஒரு புள்ளையும் தன்
புருசனுக்கு பெறவில்லையாம்
ஒருத்தி

ஊருறாய் மேய்ந்தாலும்
வீடு வந்து அடைகிறாள்
ஒருத்தி

பிள்ளைகள் பசியாற
பசி மறக்கிறாள்
ஒருத்தி

சத்துக்கு ஒருத்தனோடு
சம்போகம் செய்கிறாள்
ஒருத்தி

மற்றொருத்தியை
பிடிப்பதில்லை
ஒருத்திக்கு.


மதியழகன் சுப்பையா
-------------------------------------------------------


இந்தியக் கவிஞர் வரிசை குல்ஜார்
இந்தி மட்டுமல்ல இந்திய கவிதை உலகிலும் மிகவும் நேசிக்கப்படும் ஒரு அற்புதக் கவிஞர் குல்ஜார். தற்போது பாகிஸ்தானில் இருக்கும் தீனா பகுதியில் ஆகஸ்டு மாதம் 1934ம் ஆண்டு பிறந்தார். பிரிவினைக்குப் பின் குல்ஜார் இந்தியா வந்தார். அகா சம்பூரன் சிங் என்ற இயற் பெயரை குல்ஜார் என்று மாற்றிக் கொண்டார். திரைப்பட மேதை பிமல் ராய்க்கு உதவியாளராக தனது பயணத்தை துவங்கினார். மற்றும் இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜியின் துவக்க காலத்தில் அவருடனும் குல்ஜார் பணியாற்றினார். பிமல் ராயின் "பந்தினி' படத்தில் "மோரா கோரா அங் லாயி லே'' என்ற பாடல் இவரது முதல் பாடலாகும். "பந்தினி'யை தொடர்ந்து "கபுலிவாலா', "சன்னாட்டா' "பிவி அவுர் குலாம்' "து துனி சார்' "காமோஷி' ஆகிய படங்களுக்குப் பாட்டெழுதி படிப்படியாக ஏறி வெற்றி சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். இதுவரை இன்னும் இறங்கவில்லை.
சிறந்த திரைப்படப் பாடலாசிரியராக அங்கிகரிக்கப்பட்ட குல்ஜார் திரைப்படங்களுக்கு கதை வசனங்கள் எழுதத் துவங்கினார். 1971ல் "மேரே அப்னே' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் பரிணாமம் அடைந்தார். அதிலிருந்து அழகும், மென்மையும், நகைச்சுவையும் கலந்த பல திரைக் காவியங்களை தந்துள்ளார். சுமார் அறுபது படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி உள்ளார். பதினேழு படங்களுக்கும் மேல் இயக்கியும் உள்ளார்.
1987 முதல் 1996 இடையில் குல்ஜாரின் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விட்டது. இந்த பத்தாண்டு கால கட்டத்தில் இவர் ஏழு படங்களில் பாடலும் 2 படங்களை இயக்கியும் இருந்தார். ஆனால் இந்த கால கட்டங்களில் அவர் முழு அற்பணிப்புடன் கவி மிர்ஜா காலிப்பின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராகவும் பணியில் முழுமையாய் ஈடு பட்டு விட்டார். நடிகர் நஷிர்தின் ஷா இந்த தொடரில் காலிப்பாக நடித்து இருந்தார்.
1996ல் குல்ஜார் இளைய தலைமுறையுடன் கைகோர்த்து தீவிரவாதத்தை மையமாக வைத்து ""மாச்சீஸ்'' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தேசிய விருது பெற்றது. பின் இவர் " தில் சே' படத்துக்கு எழுதிய பாடல்கள் மந்திரமாக இந்தியா முழுவதும் பாடப்பட்டது. குல்ஜாருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. அரசியலை விமர்சித்து குல்ஜார் இயக்கிய "" ஹூ து து'' படம் இந்திய மக்களிடையே சலனத்தை ஏற்படுத்தியது.
பாடலாசிரியருக்கான அனைத்து விருதுகளையும் சிறப்புகளையம் குல்ஜார் பெற்று விட்டார். சமீபமாக இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்தின் கதைகளை மையமாகக் கொண்டு "தெஹரிர்... முன்ஷி பிரேம்சந்த் கி'' என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கி உள்ளார்.
குல்ஜார் திரைப்படப் பணிகளில் தீவிரமாக இயங்கினாலும் தனது கவிதைப் பணிகளை புதிய காதலைப் போல் காத்து வந்தார். ""எக் பூந்த் சாந்த்'' என்ற கவிதைத் தொகுதி 1962ல் வெளியானது. சமீபமாக ""திரிவேணி'' ""ராத் சாந்த் அவுர் மெய்ன்'' ""ராத் பாஷ்மைன் கி'' ஆகிய கவிதை தொகுதிகள் சமீபத்தில் வெளியாகின.
மேலும் ""மேரா குச் சாமான்'' மற்றும் "'சைய்யா சைய்யா'' என அவர் இதுவரை எழுதிய திரைப்பட பாடல்கள் தொகுப்பும் வெளியிடப் பட்டுள்ளது.
சமீபமாக பல சோதனை முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இவரது சிறுகதைகளை மையமாகக் கொண்டு சலிம் அரிப் ""கராஷேன்'' என்ற நாடகத்தை உருவாக்கினார். இசை கோர்ப்பாளர் அபிஷேக் ராயுடன் சேர்ந்து "" உதாஸ் பானி'' என்ற இசை ஆல்பத்தை தனது கவிதைகள் மூலம் அலங்கரித்தார். மேலும் ஓவியர் அஜய் குமார் சமிர் "பொயட்ரி ஆன் கான்வாஸ்' என்ற ஓவியங்களை வரைந்தார். இவ்வாறு பலதரப்பட்ட புது வடிவங்களில் தனது கவிதையை வெளிப்படுத்தினார் குல்ஜார்.
குல்ஜார் ஐந்து தேசிய விருதுகளையும் 18 பிலிம்பேர் விருதுகளையும் வாங்கி உள்ளார். இவருடைய ""துவான்'' என்ற சிறுகதைகளை தொகுப்பு நூலுக்காக 2003ம் ஆண்டிற்கான சாஹித்திய அகடமி விருது பெற்றுளார். பிலிம்பேரின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு பத்மபூஷன் விருதும் வழங்கி இவரை கௌரவித்து உள்ளது.

1.
சிறுவர்களாய் இருந்தோம்,
அம்மா வரட்டித் தட்டுவாள்
கண்கள் வைத்து காது செய்து
மூக்கு அலங்கரித்து
வரட்டியில் முகம் வரைவோம்
முண்டாசுகார தொப்பிக்கார
எனது வரட்டி உனது வரட்டி
நாங்கள் அறிந்த தெரிந்த
பெயர்கள் கூவி வரட்டி தட்டுவோம்.

பாடி சிரித்தோடி வரும் பகலவன்
சாண வரட்டிகளில் விளையாடுவான்
இரவில் எரிகையில் அடுப்பை சுற்றியிருந்து
எந்த வரட்டி எரிகிறது
யாருடைய வரட்டி சாம்பலாகியது
பார்த்திருப்போம்
அது பண்டித் அது முன்னா
அது தஷாரத் ஆண்டுகள் கழித்து
சுடுகாட்டில் அமர்ந்து
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இன்று இரவு எரிந்து
கொண்டிருக்கும் அடுப்பில்
மேலும் ஒரு நண்பனின் வரட்டி.

2.
வழக்கமாய் கொடுத்தாய் வாக்குறுதி
வழக்கமாய் நானும் காத்திருந்தேன்

உனது பாதையில் கால் கடுக்க நின்று
நான் எனக்காக காத்திருந்தேன்

இனி வாழ்க்கையோ வரமோ கேட்க மாட்டேன்
அந்தக் குற்றத்தை ஒருமுறை செய்து விட்டேன்

3.
கண்களை எரிக்கிறது அணையாத புகை
திரண்டு கருக்கிறது மேகம்போல்
பொழிவதேயில்லை புகை

அடுப்பு எரிக்கவில்லை
சேரியே எரிந்து போனது
கொஞ்ச நாட்களாக
கிளம்புவதில்லை புகை

கண்களிடம் கேட்டபோது
கிடைத்தது அதன் முகவரி
முகத்தை திருப்பிக் கொள்வதால்
மறைந்து போகாது புகை

கண்களுக்கும் கண்ணீருக்கும்
உறவு அதிபழசு
விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தாலும்
மறைந்து கொள்வதில்லை இந்தப் புகை.

4.
சேரிகளின் முடுக்குகளில் பரதேசிகளின் கூட்டத்தில்
வாருங்கள் திரியலாம் நாற்சந்தி காணலாம்

காலம் அவர்களை உறிஞ்சி கொண்டு
பாதையில் எறிந்து விட்டதாக
பாடம் சொன்னார்கள்
இவர்கள் அனைவரும் சேரியில்
சேகாரமடைந்து விட்டார்கள்
இவர்கள் வாழ்க்கையின்
தோல் உரிக்கப்பட்டு வீசப்பட்டவர்கள்
இவர்களின் வியர்வை உறிஞ்சப் பட்டு
விஷம் ஏற்றப் படுகிறார்கள்.

தமிழில் : ஆனந்த செல்வி

-----------------------------------------------------------
பச்சோந்தி :
கைஃபி ஆஜ்மி

ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள்
ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள்
ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய்
அதனின்று வெளிச்சம் வராது
அதனின்று வெளிச்சம் போகாது

எந்தக் கரு பை பெற்றெடுத்ததோ இதனை
எந்த வீட்டில் வளர்ந்ததோ இது
எந்த வீட்டில் திரிந்தோ இது
எல்லா மொழியையும் பேசுகிறது
ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை
இதயத்திடம் சொல்கிறது கதையை
உனது மதம்; உனது உன்னத கடவுள்
உனது பண்பாட்டின் அடையாளத்தை
இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது
இவற்றை பின்தொடர்கிறது பேரிருள்

உறைந்து போகிறதென் குருதி
முடிக்கொள்கிறதென் திறந்த விழி
உலகின் அனைவருமென் எதிரிகள்
இப்படியே உணர்கிறேன்
தோழர்களாக எவருமில்லை
என்னை உயிருடன்
விழுங்கிக் கொண்டிருக்கிறது பூமி

இந்தியிலிருந்து தமிழில் : ஆனந்த செல்வி


---------------------------------------------------------
விடியலை
நேரம் உணர்த்தினாலும்
பனிதூறும் காலத்தில்
சூரியன் வருவதில்லை.

வளமையான
உடல் நிறைய விட
ஆறு ஏழு கிலோவால்
என் நிறை உடை வடிவில்
என்னைத் துரத்தும்.

தொட்டிலுக்குள்
பார்த்தால்
எட்டு மாத செல்ல மகள்
கையால் முகம் போர்த்து
பஞ்சுக்குஞ்சாய்
துயிலும் அழக.

மெல்ல அணைத்து
ஓசையின்றி முத்தமிட்டு
காப்பக காரியிடம்
கொடுத்துவிட்டு
வேலையில் முழ்கிற போது
திடுக்கிடும் என் மனசு.

ஓ.. என் செல்ல மகள்
என்னைத் தேடுவாளோ?

உடலில் உள்ள
உரோமம் எல்லாம் சேர்ந்து
ஒருவித சிலிர்ப்பைத் தந்து
விழிவழியே உப்பு நீரை
வரவழைக்கும்.

நளாயினி தாரைச்செல்வன்
சுவிட்சர்லாந்து

--------------------------------------------------------------------

பெண் நிலை


நீலப் புடவையில்
வெள்ளித் தட்டு
நகரும் மேகங்கள்
வானவில்லை உமிழ
மௌனமாய் அழுகிறது
மழைகாலத்தில் வானம்...

எதையோ நிரூபிக்க
உத்தியோகத்தை நினைக்க
எரிச்சல்கள் பளுவாய்
உண்மை இலக்கு இடையே
வார்த்தையாய் பாலமிட
மன ஊஞ்சல் தகர்த்தப்படும்
போதெல்லாம்
மௌனத்தின் மொழி
நா காத்து நம்மை காக்கிறது.

நா.சுப்புலட்சுமி


----------------------------------------------

உள்ளூருக்குள்ள
செவிபடு வாத்தினு
சொல்லு வானுவ

வேல பாத்த
வெளியூர் பள்ளி கொடத்துல
சக வாத்தியாருங்க
கிடாரக் குளத்தானம் பாங்க

கூடுன சாதி பயலுவல
இனங் கண்டு
அடிப்பாரு.

இல மற காயா
பேசஆரம்பிச்சவனுவ
முன்னால நின்னு பேசினானுவ
சாதியப் பத்தி

ஒய்வு பெறும் வயசுல
நல்லாசிரியர் விருது
கொடுத்துச்சு அரசாங்கம்
போங்கடா மயிராண்டிகளானு
விருத வாங்கவே யில்லஅந்த
ஆறாப்பு வாத்தியாரு.

சோலை சீனிவாசன்.

---------------------------------------------------------------
நூல் சுழன்று
காற்றில் அலைய
சிக்குண்டு தவிப்பது
கண்டு மனம் பதறாது
பின் சுழன்றாடும் காற்றில்
தவிப்பது மனங்கள்
அறுபடும் நூல்
காலச் சுழற்றியாய்
கண்ட பூ கோளபடங்கள்
பின் நூல் காற்றாகும்
பட்டத்தில் ஒட்டிசுழலும்
காகிதத்தில் ஒட்டாது
உருமும் பூமி உருண்டையால்
சில கால தவிப்புக்கள்

குமாரராஜன்

----------------------------------------------------------------
மலக்கிடங்கில் மடியும் மழலைகள்

கனத்த நீர் சுமந்து
பெருங்குடமாய் உப்பி
நீண்டுக்கிடந்தன
முனை சிறுத்த பலூன்கள்,
அடைப்பெருத்த
மலம் விழுங்கும் குழாய்க்குள்

சேர்ந்தும் சேராமல்
குறியில் உறை.

கிரிவலம் வர யத்தினித்த
பொழுதொன்றில் பார்க்க நேர்ந்தது
நடப்போரற்ற வீதியொன்றின்
பழுத்த குழலொளியில்
பெருத்த பலவித பலூன் குவியலை.

தெரித்து உரசி
வழியவிட்டோடும்
அப்பன்கள் கொலையுண்டு
அனாதையாய் ஒழுகும்
உயிர்கள் சுவரில் பிணவறையாக
கட்டண கழிப்பறை மலங்கழிக்கையில்
ஏளனமாய் சிரிக்கின்றனர்
சுவரில் புணர்ந்தபடியே பலரும்

பளபளப்பு பலவித வாகனங்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தொழிற்சாலைகள்
நெரிசல் இரைச்சல் வண்ணப் பெண்கள்
காட்சி பொருட்கள் பணப்புழக்கம்
பலருக்கும் பிழைப்பு
கற்புக்காக்க பாதுகாப்பாக
மலக்கிடங்குகளில் மடியும் மழலைகள்.

செந்தில்பாலா.

-------------------------------------------------
மனக் காகங்கள்


எண்ணங்களின் பித்ருக்களாய்
ஞாபக வெளியில்
அலையும் கருமைகள்
ஒற்றைக் கண்சாய்த்து
கள்வம் எட்டிப் பார்க்க
கவனம் பிசகும் சமயம்
உணர் உணவைக்
கவ்வி
கரைந்தழைத்துப்
பகிர்தல் மறந்து
வாயில் வடை பதுக்கி
பாடச் சொல்லும் நரியிடம் ஊமையென
நடித்து
காம எச்சங்களால்
இரவுகளை வெளுப்பாக்கி
நான்கைந்து சேர்ந்து தினம்
நாறும் எலி உடலாய்
பிறன் குறை குத்திக் கிழிக்க
எங்கிருந்தோ வீழும்
ஏமாற்றுக் கற்களில்
விருட்டென எம்பிப் பறக்கும்
மனக் காகங்ங்கள்

              
பொ செந்திலரசு


-----------------------------------------------------
லிமரைக்கூ


குடும்பத் தலைவர் மரணம்
பிள்ளைகளுக்கு வந்து விட்டது
பொறுப்பேற்கும் தருணம்.

குழந்தைக்கு விடுமுறை
எப்போதும் உழைக்கும் அம்மாவிற்கு
எந்நாளுமில்லை ஒருமுறை

வியர்வைச் சிந்தி உழுதான்
விளைந்த பயிர் வாடியது கண்டு
கண்ணீர் விட்டு அழுதான்.

காட்டில் குயில் பாடியது
கேட்டு மயங்கி மயில்லொன்று
தன்னை மறந்து ஆடியது.

கூட்டை விட்டு வெளியே
பறந்து சென்றுத் இரையைத் தேடிடும்
இறகு முளைத்த கிளியே

துக்கம் விசாரிக்கப் போனான்
இழவு வீட்டை அடையு முன்னே
விபத்தில் பலி ஆனான்

பொன்குமார்
---------------------------------------------
நமக்கான வெற்றி
மோசமான ஒர் இடத்திலிருந்து
நம் ஒட்டத்தைத் துவக்குகிறோம்
நம் சிப்பாய்கள்
எங்கும் சிதறிக் கிடக்கின்றன
ஜோடிக் குதிரையில்
ஒன்று வீழ்த்தப்பட்டுவிட்டது
பிஷப்புகள்
நகர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளன
நாளையின் இடமோ பாதுகாப்பற்றது
எந்நேரமும்
வெட்டுப்பட்டு விடலாம்
என்ற நிலையில்
யானைகள்
எதிராளியின் முகத்தில்
ஒரு கேலிப் புன்னகை
தீர்க்கமான
ஒரு முடிவுக்குப் பின்
ஒரு காயை நகர்த்துகிறோம்
இன்னும்
ஒரு சில நகர்த்தல்களுக்குப் பின்
ஆட்டம் முடியப் போகிறது

தபசி
------------------------------------------------------
காலை கமகமத்து துவங்கும்
வணக்கப் பரிமாறல்களில்

அழைத்தாயா? என்று
கேட்போம் அழைத்து

நினைத்தாயா? என்று
கேட்க நினைவிருப்பதில்லை

பார்ப்போமா?என்று
கேட்க பயமாயிருக்கிறது

கோபமா? என்று
கேட்கிறோம் குலைந்தபடி

சாப்பிட்டாயா? என்று
கேட்கவே பசிக்கிறது

பத்திரம்டா! என்று
சொல்லத் தவறுவதில்லை

மன்னித்திடு! என்று
கூற மறப்பதில்லை

நன்றி! என்று
சொல்லாமல் முடிவதில்லை

புள்ளிகளால்
நிறைகிறது கோடு

அந்தியில்
சிவக்கிறது வானம்.

மதியழகன் சுப்பையா
-------------------------------------------

No comments: