Tuesday, June 19, 2007

டார்ச் வியாபாரி



இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி
தமிழில்: மதியழகன் சுப்பையா


முதலில் அவன் முச்சந்தியில் மின்சார டார்ச் விற்றுக் கொண்டிருந்தான். இடையில் கொஞ்ச நாட்களாய் அவனைக் காணவில்லை. மீண்டும் நேற்றுதான் தென்பட்டான். இப்பொழுது அவன் தாடி வைத்திருந்தான். நீளமான ஜிப்பா மாட்டியிருந்தான்.
''ஏம்ப்பா, எங்கிருந்த? தாடி ஏன் வளர்த்திருக்க?''
'' வெளியூர் போயிருந்தேன். '' பதிலளித்தான். தாடியைப் பற்றிய கேள்விக்கு அவன் பதிலளிக்காமல் தாடியைத் தடவிக் கொண்டிருந்தான்.
'' ஏன் இன்னைக்கு டார்ச் வியாபாரம் பண்ணலியா?''
'' அந்த வேலையை இப்ப செய்யிறதில்லை! இப்ப த்மாவிற்குள் டார்ச் எரிய ரம்பிச்சிருக்கு அதனால் இந்த 'சூரியன் மார்க்' டார்ச்கள் வீணாய்ப்படுகிறது''
''எனக்கென்னவோ நீ சந்நியாசம் போவதாய் தெரிகிறது. எவன் த்மாவில் பிரகாசம் பரவுகிறதோ அவன் இப்படித்தான் சோம்பேறித்தனத்தை தரித்துப் பேசுவான். சரி! யாரிடமிருந்து ஞானம் பெற்று வந்தாய்?''
என் வார்த்தைகள் அவனை சுட்டிருக்க வேண்டும். ''அய்யோ! இப்படி கடுயான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். எல்லோருக்கும் த்மா ஒரே மாதிரிதான். என் த்மாவிற்குள் காயத்தை ஏற்படுத்தி விட்டு உங்கள் த்மாவையும் காயப் படுத்திக் கொள்கிறீர்கள்'' என்றான்.
'' எல்லாம் சரிதான், னால் திடீரென்று எப்படி இப்படி னாய்? ஏன் உன் பொண்டாட்டி விட்டுட்டுப் போயிட்டாளா? கடன் கொடுக்க யாரும் மறுத்து விட்டார்களா? இல்லை ஏதாவது திருட்டு விவகாரத்துல மாட்டிக்கிட்டியா? எப்படிப்பா வெளியிலிருந்த டார்ச் த்மாவுக்குள் புகுந்திருக்கும்? '' கேட்டேன் நான்.
அவன் உடனடியாக மறுத்தான் '' உங்கள் அபிப்ராயம் தவறானது. அப்படி ஒன்னுமில்லை. ஒரு சம்பவந்தான் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது. நான் அதை ரகசியமாக வைக்கனுமின்னு இருந்தேன். உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.....'''
அவன் தன் வாக்குமூலத்தைத் துவங்கினான்.
'' ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயம். நான் என் நண்பன் ஒருவனோடு தனிமையில் உட்கார்ந்திருந்தேன். எங்கள் இருவருக்குள்ளும் வானத்தையே தொடுவதாய் ஒரு கேள்வி எழுந்தது. என்னவென்றால்- 'பணம் எப்படி சம்பாதிப்பது? நாங்கள் இருவரும் அந்தக் கேள்வியின் இரண்டு கால்களையும் பிடித்து இழுத்து தள்ளிவிடப் பார்த்தோம். வியர்வை வந்துவிட்டது. னால் அதை அசைக்க முடியவில்லை. ' அதன் கால்கள் பூமியில் ழக் காலூன்றி விட்டது, அதைப் பிடுங்கி எறிய இயலாது எனவே அதை தவிர்த்திடலாம்' என்றான் நண்பன்.
நாங்கள் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டோம். னால் அந்தக் கேள்வி மீண்டும் எங்கள் முன்னால் விஷ்வரூபம் எடுத்து நின்றது. இந்தக் கேள்வியை நாம் தவிர்க்க இயலாது. அதனால் இதை விடுவிக்கப் பார்ப்போம் என்று இருவரும் முடிவு செய்தோம். பணம் சம்பாதிக்க ஏதாவது தொழில் பார்க்கலாம் என்று உடனே வேறுவேறு திசையில் தத்தம் பலன்களை பார்க்கப் புறப்பட்டு விட்டோம். ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் இதே நாள் இதே இடத்தில் இதே சமயத்தில் சந்திப்போம் என்று நான் யோசனை சொன்னேன்.
' நாம் ஏன் சேர்ந்தே போகக் கூடாது?' என்றான் நண்பன்.
' இல்லை, நாம் சேர்ந்து போவதனால் நம் பலன்கள் ஒன்றோடொன்று மோதி உடைந்து போக வாய்ப்பு உள்ளது. மேலும் பலன் பார்க்க புறப்பட்டவர்கள் தனித்தனியே போனதாய்த்தான் புராணக் கதைகள் சொல்கின்றன.' என்றேன்.
இப்படியாக நாங்கள் இருவரும் தனித்தனியே பயணப்பட்டோம். நான் டார்ச் விற்கும் தொழிலை அரம்பித்தேன். முச்சந்தியில் மக்களைக் கூவி அழைத்து ஒன்று திரட்டி நாடக பாணியில் சொல்வேன் ' இன்று எல்லா திசைகளிலும் இருள் சூழ்ந்து விட்டது. இரவு மிகக் கருமையானதாக இருக்கும். நம் கைகளே நமக்குப் புலப்படாது. மனிதனுக்கு பாதை தெரியாது. அவன் வழி தவற வாய்ப்புள்ளது. அவன் கால்கள் முட்களில் குத்தப்படும். அவன் விழுந்து கால் முட்டியில் ரத்தம் கசிய ரம்பித்து விடும். அவனைச் சூழ்ந்து இருள் இருக்கும். சிங்கமும் சிறுத்தையும் அவனைச் சுற்றி வரும். அவன் பாதையில் பாம்புகள் ஊர்ந்து கிடக்கும். இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கும். வீட்டிற்குள்ளும் இருள் இருக்கும். இரவு நேரம் மனிதன் சிறுநீர் கழிக்க எழுவான், பாம்பின் மேல் கால் வைத்து விடுவான். பாம்பு அவனை கடித்து வைக்க அவன் செத்துப் போவான்''
இப்படி நான் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என் பேச்சைக் கேட்டு மக்கள் பயந்து விடுவார்கள். நன்பகலிலும் அவர்களுக்கு இருட்டின் பயம் அப்பிக் கொண்டு நடுங்க ரம்பித்து விடுவார்கள். மனிதனை பயமுறுத்துவது எவ்வளவு பெரிய வேலைப் பார்த்தீர்களா? பயந்துபோன மக்களிடம் நான் '' இருள் இருப்பது உண்மைதான், அதே நேரத்தில் பிரகாசமும் உள்ளது. அந்தப் பிரகாசத்தைத்தான் நான் உங்களுக்கு கொடுக்க வந்துள்ளேன். 'எங்கள் சூரியம் மார்க்' டார்ச்சுகளில் அந்தப் பிரகாசம் உள்ளது. அதனால் இப்பொழுது சூரியன் மார்க் டார்ச்சுகளை வாங்குங்கள். உங்களை மிரட்டும் இருளை விரட்டுங்கள். டார்ச் வேண்டுமென்போர் கையைத் தூக்குங்கள்'' என்பேன்.
என் டார்ச்கள் விற்பனையாகி விடும். பின் நான் னந்தமாய் வாழ்ந்து வந்தேன். சொல்லி வைத்தபடி ஐந்து வருடம் கழித்து நண்பனை சந்திப்பதாய் சொன்ன அந்த இடத்தை அடைந்தேன். அங்கேயே பகல் முழுவதும் அவனுக்காக காத்திருந்தேன். னால் அவன் வரவில்லை. என்னவாகியிருக்கும்? அவன் மறந்திருப்பானோ? இல்லை அவன் இந்த உலகத்திலேயே இல்லையா?
நான் அவனைத் தேடக் கிளம்பினேன்.
ஒரு மாலை, நகரம் நோக்கிச் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். அருகில் ஒரு மைதானத்தில் மின் விளக்குகளின் ஒளி பகல் போல் காட்சியளித்தது. ஒரு புறம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஒலி பெருக்கிகள் பொருத்தப் பட்டிருந்தது. மைதானம் முழுவதும் ண்களும் பெண்களும் அமைதியோடு தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். மஞ்சத்தில் பட்டு உடைகளை அணிந்தபடி ஒரு சாந்தமான மனிதர் அமர்ந்திருந்தார். அவர் நல்ல கொழுத்துப் பருத்திருந்தார். நல்ல முறையில் பராமரிக்கப் பட்ட நீண்டு சுருண்ட தாடி, முதுகில் புரளும் கருத்த தலைமயிர்.
நான் கூட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேன். மேடையில் சாந்த மனிதர் திரைப்பட சாது போல காட்சியளித்தார். அவர் குரு கம்பீரத்தோடு போதனையை துவங்கினார். அவர் பேசியது வானத்தின் ஒரு கோணத்திலிருந்து யாரோ காதுகளில் பேசியது போல் இருந்தது.
''இன்று நான் மனிதனை ஒரு கனத்த இருளில் காண்கிறேன். அவனுக்குள் ஏதோ ஒன்று அணைந்து விட்டது. இந்த யுகமே இருண்ட யுகம்தான். சகல கிரக இருளையும் இந்த பிரபஞ்சத்திலேயே ஒழித்து வைத்தார்போல் இருக்கிறது. இந்த இருள் நீங்க வழியில்லை எனலாம். இன்று த்மாவும் இருளில்தான் உள்ளது மனித த்மா இந்த இருளில் இறுகித்துப் போகிறது. அகக் கண்கள் ஜோதி இழந்து போய் விட்டது. மனித த்மாக்கள் பயத்தாலும் துன்பத்தாலும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.'' இப்படியே அவர் பேசிக் கொண்டிருக்க மக்கள் ஸ்தம்பித்துப்போய் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இரண்டு மூன்று முறை அடக்கியும் முடியாமல் சிரித்து விட்டேன். அருகிலிருந்தவர்கள் என்னை அதட்டி வைத்தார்கள்.
மேடையின் சாந்த புருஷர் தனது போதையின் இறுதியாய் ''சகோதரர்களே! சகோதரிகளே! பயப்படாதீர்கள். எங்கு இருள் உள்ளதோ அங்குதான் பிரகாசமும் உள்ளது. ஒளியிலும் இருளின் கதிர்கள் உள்ளன. உள்ளுக்குள் அணைந்து போயிருக்கும் ஜோதியை எழுப்புங்கள். அந்த ஜோதியை உசுப்பவே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் தியான கோவிலுக்கு வந்து உங்களின் அகவிளக்கை உசுப்பி உயிர்ப்பியுங்கள்'' என்றதும் நான் குலுங்கி குலுங்கி சிரிக்கும் நிலையை அடைந்து விட்டேன். அருகே அமர்ந்திருந்தவர்கள் என்னைப் பிடித்து தள்ளாத குறையாய் விரட்டினர். நான் மேடையின் அருகில் போய் நின்று கொண்டேன்.
சாந்த மனிதர் மேடையிலிருந்து இறங்கி காரை நோக்கி நடக்கலானார். நான் அவரை மிக அருகிலிருந்து உற்றுப் பார்த்தேன். அவருடைய தாடி அடர்த்தியாய் வளர்ந்திருந்தது. அதனால் நான் சற்று தடுமாறியிருந்தேன். னால் எனக்குத்தான் தாடியில்லையே நான் முன்பிருந்த அதே தோற்றத்தில்தான் இருந்தேன். அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார் போலும்.
''அடேய்! நீயா?'' என்று நான் அவரை அடையாளம் கண்டு கொள்ளும் முன் அவரே என் கைகளைப் பிடித்து காரில் உட்கார வைத்துக் கொண்டார். நான் வலாய் பேச ரம்பித்தபோது என்னை தடுத்து 'பங்களாவரை வேறெதுவும் பேச வேண்டாம் அதே ஞான உபதேசங்களை மட்டுமே பேசுவோம்'' என்றார் முனுமுனுப்பாய்.
நான் அப்பொழுதுதான் காருக்குள் மூன்றாவதாக டிரைவரும் இருப்பதை உணர்ந்தேன். பங்களாவுக்குள் நுழைந்ததும் அவரின் அதட்டலைக் கண்டு மிரண்டு போனார்கள். நானும் அவர் கம்பீர பேச்சுகளால் சற்றே மிரண்டேன். னாலும் நான் மனம் திறந்து பேச ரம்பித்து விட்டேன்.
''யப்பா நீ ரொம்ப மாறிட்ட'' என்றேன்.
'மாற்றம்தானே வாழ்க்கையில் அடிப்படை' என்றான் கம்பீரத்தோடு.
''டேய், பில்லாசபி பேசாம எப்படி இந்த அஞ்சு வருடத்துல இவ்வளவு வசதிய சம்பாதிச்சன்னு சொல்லு?'' என்றேன் உரிமையோடு.
''நீ இத்தன வருசமா என்ன செஞ்சுக்கிட்டிருந்த?' என்று மறுகேள்வி கேட்டான் என் கேள்விக்கு பதிலளிக்காமல்.
'நான் சுற்றி சுற்றி டார்ச் விற்றுக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லு நீயும் டார்ச் வியாபாரிதானே' என்றேன்.
' உனக்கேன் அப்படித் தோனுது?' என்றான்.
' நீயும் நான் பேசுவது போலத்தான் பேசுகிறாய். நானும் இருளைக் காட்டி பயமுறுத்திதான் டார்ச் வியாபாரம் செய்வேன். நீயும் மக்களிடம் இருட்டைப் பற்றி சொல்லித்தானே பயமுறுத்திக் கொண்டிருந்தாய். அப்படியானால் நீயும் டார்ச் விற்கும் தொழில்தான் செய்கிறாய் இல்லையா? என்ன ஒன்று, நான் சத்தமாய் பேசுவேன், நீ அமைதியாய் பொறுமையாய் பேசுகிறாய்' என்றேன்.
''யப்பா! நீ என்னை அறியமாட்டாய். நான் ஏன் டார்ச் விற்கப் போகிறேன். நான் ஞானி, சாமி, கடவுள் என்றெல்லாம் அழைக்கப் படுகிறேன்' என்றான்.
' நீ என்னமோ சொல்லுப்பா னாலும் நீ டார்ச்தான் விக்குற. உலகம் முழுவதும் வெளிச்சம் பரவி கிடக்குது. னா இருட்டு இருட்டுன்னு எப்படி பயமுறுத்துற, ஏன் டார்ச் விக்கனுமுன்னுதானே? நான் கூட நல்ல பகல்லேயும் இருட்டைப்பத்திதான் பேசி டார்ச் விற்பேன். உண்மையைச் சொல்லு எந்த கம்பெனி டார்ச் விக்குற? என்றேன் நான் மிக ர்வமாய்.
என் பேச்சால் அவன் ஒரு நிலைக்கு வந்துவிட்டான்.
' உன் கேள்வி சரிதாம்ப்பா என் கம்பெனி புதுசு' என்றான்.
'உங்கக் கம்பெனி கடை எங்குள்ளது. சேம்பிளுக்கு ஏதாவது டார்ச் காட்டேன். பார்க்கிறேன். 'சூரியம் மார்க்' டார்ச்சை விட அதிகம் விற்கக் கூடியதா அது?' என வினவினேன்.
'அந்த டார்ச்சுக்குன்னு பஜாரில் கடை எதுவும் கிடையாது. அது மிகவும் சூட்சமமானது. னால் அதற்கு நல்ல விலை கிடைக்குது. ஒன்றிரண்டு நாட்கள் இங்கேயே தங்கியிருந்து பார் எல்லாம் புரிந்து கொள்வாய்' என்றான்.
இப்படியாய் நான் அவன்கூட இரண்டு நாட்கள் இருந்தேன். மூன்றாவது நாளே 'சூரியன் மார்க்' டார்ச் பெட்களை நதியில் வீசிவிட்டு புது வேலையைத் தொடங்க ரம்பித்து விட்டேன்.' என்று நினைவு திரும்பியவனாய் மீண்டும் அவன் தன் தாடியை தடவி விட ரம்பித்தான்.
''இன்னும் ஒரு மாதம்தான் அப்புறம்!'' என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டான்.
''அப்ப, என்ன வியாபாரம் செய்யப் போற?'' நான் கேட்டேன்.
''வியாபாரம் அதேதான்- அதாவது டார்ச் விற்பது னால் கம்பெனியை மாத்திக்கிட்டேன் அவ்வளவுதான்'' என்றான் நம்பிக்கையோடு.

No comments: