Wednesday, March 31, 2004

தனிமையின் பிடியில்

1
புத்தகங்களை
புரட்டியாயிற்று

தொலைக் காட்சியின்
அலைவரிசைகளையும்
அலசியாயிற்று

நான்கைந்து முறை
தேனீர் குடித்தாயிற்று.

கோட்டோவியத்தில்
உருவம் எழுத
முயற்சித்தாயிற்று

இறுதியாய்
கவிதை எழுத அமர்ந்தேன்
வெறுமை நீங்கி
இருமையாகிப் போனேன்.

***************************************
2.
கிறுக்கல்கள்
கிழிசல்கள்
சிதிலமடைந்த சுவர்கள்
ஓவியப் பரப்பாய் விரிகிறது.

சிறிய அசைவுகள்
நிச்சய விணைகள்
அற்ப பொருட்கள்
உன்னத இசையாய்
ஒலிக்கிறது.

தட்டப் படாத கதவு
ஊமையான தொலைபேசி
வெளிச்சமில்லா வீடு

அடிக்கடி திறந்து
மூடப்படுகிறது
கழிப்பறையின் கதவு.

*********************************************************

3.

இன்று காலை
பேருந்தில் பார்த்தவள்
தொடங்கி
பட்டியல் முடிந்து போகவே
தளர்ந்த நடையுடன்
வண்ண அட்டை
வார இதழ் தேடுகிறேன்
உருவங்கள் வேண்டி.

**********************************************************
4.

ஒற்றை பிம்பம் காட்டி
அலுத்துக் கொள்கிறது
நிலைக் கண்ணாடி

இளையராஜாவின்
இசையில் பிசிரடிக்கிறது.

ஆயுள் தூக்கம்
தோங்கியாயிற்று.

புழுங்கி நாறுகிறது
உடலும் உடையும்.

காற்று வரவே
கதைவைத் திறந்தேன்.

கூறை அகற்றினால்
ஒளியும் வருமே.

***************************************************
5

எலிகளுக்கு
விஷம் வைப்பதில்லை

ஒட்டடை அடித்து
காலங்களாகி விட்டது.

கரப்பான்களுக்கும்
பாட்சைகளுக்கும்
மருந்து வைப்பதில்லை.

கொசு வத்திகள்
கொளுத்துவதே இல்லை

ஆனாலும்
எப்பொழுதாவது
வாசல் வழி
எதிரொளி மட்டுமே
எட்டிப் பார்க்கிறது.
****************************************************