Tuesday, September 19, 2006

தரன்னம் ரியாஜ்

தரன்னம் ரியாஜ் உருது மொழியின் பிரபலமான கவிஞர். புனைவு சிறுகதை மொழி பெயர்ப்பு, விமர்சனம், மற்றும் நாவல் என பல தளங்களில் இயங்குகிறார். இவர் தொலைக்காட்சி மற்றும் வானொலி துறையில் பல ண்டுகள் உருது மொழி செய்தியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். காஷ்மீரில் இருந்து வெளியாகும் சில பத்திரிக்கைகளில் பெண்களுக்கான பகுதிக்கு சிறப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
கவிஞர் தரன்னம் டெல்லியில் வசித்து வருக்கிறார்.
தரன்னத்தின் கவிதைகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இந்தி மற்றும் உருது பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. 'ஷாயர்' (மும்பை), 'ஷிராஜா' (ஸ்ரீநகர்), 'அய்வாநெ-உருது' (டெல்லி), 'தக்லீக்' (லாகூர்), 'தஷ்தீர்' (கராச்சி), ' பானி தர்யா'' ( ஜலந்தர்) போன்ற பிரபல பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளது.
இவரது கவிதைகள் தொகுதியாக வெளிவந்துள்ளது. இது தவிர மூன்று சிறுகதைகள் தொகுப்பும், ஒரு நாவலும் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் உருது பெண்களின் இலக்கியம் என்ற நூலையும் வெளியிட்டு உள்ளார்.
தரன்னம் அவர்களின் சிறுகதைகளுக்காக உத்திரப் பிரதேச உருது அகடமி விருது (1988) மற்றும் டெல்லி உருது அகடமி விருது (2004) வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டுள்ளார். சாகித்ய அகடமி மற்றும் டெல்லி உருது அகடமி ஏற்பாடு செய்த பல கருத்தரங்கங்களில் பங்கு பெற்றுள்ளார். உருது இலக்கியத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பல கருத்தரங்கங்களில் பேசி உள்ளார்.
இவரது கவிதைகள் உருது இலக்கியத்தில் குறிப்பிடும்படியானவை. காதல் உணர்வுகளை பெண்களின் மொழியில் எழுதுவது இவரது சிறப்பு. இவரது கவிதைகளில் மனித உணர்வுகளும் அந்தரங்க வாழ்வின் அவலங்களும் வெளிப்படுகிறது. நகைச்சுவை சோகம் மற்றும் பல மறைக்க இயலா மானுட உணர்வுகள் இவரது கவிதைகளில் இயல்பாய் வெளிப்படுகிறது.
தனது படைப்புகளின் மூலம் உரிமை கோரிக்கைகள் விடுக்காமல் எதிர்பாலரை தனக்கு இணையாக மதித்து தன் சுதந்திரம் தன்னிடமே இருப்பதாக உணர்ந்து எழுதி உள்ளது சிறப்பு.
' நான்கு சதுரத்தாலான அவன் இதயம்' என்ற கவிதையில் இவரது மனநிலையும் இயல்பும் பலமும் வெளிப்படுகிறது. அன்புக்கும் காதலுக்கும் ஏங்கும் மனது ண் பெண் பாகுபாடு அறியாதது. உணர்வுகள் என்பது இருபாலருக்கும் ஒத்த மொழி. இதில் வேறுபாடுகள் இல்லை என இவரது கவிதைகள் கலகம் செய்கின்றன.
இவரது ''புரானி கிதாபோன் கி குஷ்பூ'' என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது. 'யே தங் ஜமீன்'' ''அபாபிலைன் லவுட் யேங்கி'' ''யம்பர்ஜால்'' கிய சிறுகதைத் தொகுப்புகளும் ''மூர்த்தி'' என்ற நாவலும் வெளியாகி உள்ளது. பிரபல எழுத்தாளர் அனிதா தேசாய் அவர்களின் படைப்புகளை '' ஏ கேட் ன் அ ஹவுஸ்போட்'' என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலும் வெளியிட்டு உள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் உருது பெண்களின் படைப்புகள் என்ற தொகுப்பை சாகித்ய அகடமி வெளியிட்டு உள்ளது.
------------------------------------------------------
நெஞ்சுக்கு அருகில்
-----------------------------------
உன் ஹாக்கி மட்டை, உன் கணிணி
அமைதியாக உள்ளன உன் அறையில்
உனது படுக்கை அதிமென்மையாய், சுருக்கங்கள் இன்றி
உனது மேஜை சுத்தமாகவும் ஒழுங்காகவும்
அதுயது அதனதன் இடத்தில்
தரையில், மூலையில்
ஒரு ஜதை செருப்புகள்
தொந்தரவில்லாமல் அமைதியாய்

உனது எதிர்காலம் கருதி
என்னைக் கட்டாயப் படுத்தி
உன்னை தூரம் அனுப்பினேன்
நீ போன நாளிலிருந்து
இந்த தனித்த இதயம்
நிலைக்குத்திய கண்கள்
உன் வருகைக்காக காத்திருக்கிறது

ஓ! வா, வந்துவிடு
ஒழுங்கான வீட்டில் அனைத்தையும்
தலைகீழாய் புரட்டிப்போடு
உள் விருப்பப்படி
அலரல் இசையை விரும்பியபடி
சத்தமாக்கி ஒளிக்கச் செய்
என்னென்ன சேஷ்டைகள்
செய்ய வேண்டுமோ செய்
நீ இவ்வீட்டில் இருக்கிறாய்
என்பதை நான் உணரும்படி செய்

உன்னை நெஞ்சுக்கு
அருகில் வைத்துக் கொள்வேன்
என்றும், என்றென்றும்
கடிந்து கொள்ள மாட்டேன்.

------------------------------------------------------------------
பழைய புத்தகங்களின் வாசனை
----------------------------------------

மாறுபட்டதொரு ஒளி
மாறுபட்டதொரு இனிமை
மாறுபட்டதொரு பரிச்சயம்
இன்னும் தெரியவில்லையா
என்னவென்று
உன் வாசனை நினைவுகளால்
என் இதயம் நிரப்பு
பழைய புத்தகங்களில்
நிறைந்து கிடக்கும்
இனிய வாசனைப் போல்.

-----------------------------------------------------------
உருதுவிலிருந்து: ஜெய்பால் நாங்கியா

No comments: